Advertisment

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018 : இந்தியன் டீம் எங்கே?

திறமைகள் கொட்டிக் கிடக்கும் இந்தியர்களுக்கு கால்பந்து மட்டும் என்ன விதிவிலக்கா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
indian football

ஆசைத் தம்பி

Advertisment

கால்பந்து ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வாகி உள்ளன. 32 நாடுகளில் 20 நாடுகள் கடந்த 2014 உலகக் கோப்பையில் விளையாடிய அணிகளே. ஐஸ்லாந்து, பனாமா உள்ளிட்ட அணிகள் ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கு முதன்முதலாக தேர்வாகி உள்ளன.

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொழும்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்குகின்றன.

எகிப்து அணி 28 வருடங்களுக்கு பிறகு இம்முறைதான் கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடத் தகுதிப் பெற்றுள்ளது. கடைசியாக அந்த அணி 1990-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் விளையாடியிருந்தது. இதேபோல் மொராக்கோ அணி 1998-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் களமிறங்குகிறது. பெரு அணி 36 வருடங்களுக்கு பிறகு களம் இறங்குகிறது.

2002-ம் ஆண்டு காலிறுதிப் போட்டி வரை முன்னேற்றம் கண்டிருந்த செனகல் அணி 2-வது முறையாக தற்போதுதான் உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றுள்ளது. நார்டிக் நாடுகளை சேர்ந்த டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியவையும், அரபு நாடுகளான எகிப்து, சவுதி அரேபியா, துனிசியா, மொராக்கோ ஆகியவை கூட்டாக தகுதி பெற்றுள்ளது இதுவே முதன்முறையாகும்.

அதேசமயம், நான்கு முறை சாம்பியனான இத்தாலி இந்த உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப் பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமான விஷயம் தான்.

அதுசரி! நம்ம இந்திய கால்பந்து அணி ஏன் தகுதிப் பெறவில்லை? என்னாச்சு? அப்படியே ஒரு ரீவைண்ட் போவோம்!

உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு, கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதமே தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்கிவிட்டன. ஆசிய கால்பந்து கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் இதில் கலந்து கொண்டன.

இதில் ஆசிய அளவில் 35வது இடத்தில் இருந்த இந்திய அணி, 41வது இடத்தில் இருந்த நேபாலை 2-0 என்ற கோல் கணக்கில் முதல் சுற்றில் வென்று நம்பிக்கையுடன் பயணத்தை தொடங்கியது. இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது சுற்றுக்கு இந்தியா முன்னேறியது.

இரண்டாவது சுற்றில், ஈரான், ஓமன், டர்க்மெனிஸ்தான், குவாம் ஆகிய அணிகளை உள்ளடக்கிய குரூப் D-ல் இந்திய அணி இடம் பெற்றிருந்தது. ஆனால், இதில் எட்டு போட்டிகளில் ஆடிய இந்திய அணி, ஒரேயொரு போட்டியில் மற்றும் வென்று, 7 போட்டியில் தோற்றது. இதனால், இம்முறையும் உலகக் கோப்பை தொடரில் பங்கு பெறுவது கனவாகவே போனது இந்திய அணிக்கும், இந்திய கால்பந்து ரசிகர்களுக்கும்.

இந்திய கால்பந்து அணியின் சகாப்தம்:

1951 - 1962 காலக்கட்டம் இந்திய கால்பந்து அணியின் மிகச் சிறந்த காலக்கட்டம் எனலாம். இந்திய கால்பந்து ஜாம்பவான் சையது அப்துல் ரஹீமின் தலைமையில் இந்திய அணி, ஆசியாவின் சிறந்த அணியாக விளங்கியது. 1951ல் நடந்த ஆசிய விளையாட்டுத் தொடரில், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

1951ல் இருந்து 1955 வரை நடைபெற்ற Quadrangular தொடரை தொடர்ச்சியாக வென்றது இந்திய கால்பந்து அணி. 1956ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் தொடரில், கால்பந்து போட்டிகளில் நான்காவது பிடித்தது இந்தியா. உலக அணிகள் பங்கேற்கும் கால்பந்து தொடரில், இந்திய கலந்து கொண்டது இது இரண்டாவது முறையாகும். அதுவும் தொடரை நடத்திய ஆஸதிரேலியா அணியை முதல் போட்டியிலேயே 4-2 என்ற கோல் கணக்கில் ஓடவிட்டது இந்திய கால்பந்து அணி.

அதுமட்டுமின்றி, அப்போட்டியில் நெவில்லே என்ற இந்திய வீரர் ஹாட்ரிக் கோல் அடித்து, ஒலிம்பிக்சில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் ஆசிய வீரர் எனும் பெருமையை பெற்றார். அந்த ஒலிம்பிக் தொடரில், அரையிறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, ஒலிம்பிக்சில் அரையிறுதி வரை முன்னேறிய முதல் ஆசிய அணி எனும் பெருமையை பெற்று வரலாற்றை படைத்தது.

சுதந்திரம் அடைந்த பிறகு, 1948ம் ஆண்டு பிரான்ஸை 1-2 எனும் கோல் கணக்கிலும், 1956ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவை 1 – 7 என்ற கணக்கிலும் இந்திய அணி வீழ்த்தியது என்றும் மறக்க முடியாத பசுமையான நிகழ்வுகளாகும்.

திறமைகள் கொட்டிக் கிடக்கும் இந்தியர்களுக்கு கால்பந்து மட்டும் என்ன விதிவிலக்கா?

தரவரிசையில் தற்போது இந்திய கால்பந்து அணி, 97வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்திய கால்பந்து அணியின் தலைமை கோச் ஸ்டீபன் கான்ஸ்டடைன் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, எதிர்வரும் ஹீரோ இன்டர் காண்டினண்டல் தொடருக்கு தயாராகும் பொருட்டு, அணித் தயாரிப்பு முகாம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இதில், கலந்து கொள்ளுமாறு 30 இந்திய கால்பந்து வீரர்களை அவர் அழைத்துள்ளார்.

இந்த ஹீரோ இன்டர் காண்டினண்டல் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடரில் இந்திய கால்பந்து அணியால் சாதிக்க முடியும். அதற்கு, இந்த முகாமை வீரர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இந்திய கால்பந்து ரசிகனின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

இது போன்ற சிறப்பான பயிற்சிகளும், அதற்கு தேவையான ஆதரவும் இந்திய கால்பந்து அணிக்கு கிடைத்தால், சச்சின், தோனி, கோலி போன்ற ஹீரோக்கள் கால்பந்திலும் நிச்சயம் உருவாகுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment