உலக லெவன் அணியை ஊதித் தள்ளிய வெஸ்ட் இண்டீஸ்!

உலக லெவன் அணி, இவ்வளவு மோசமாக தோற்போம் என எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்

ஆசைத் தம்பி

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று இரவு சகித் அப்ரிடி தலைமையிலான உலக லெவன் அணியும், கார்லஸ் பிரத்வெயிட் தலைமையிலான ‘உலக டி20 சாம்பியன்’ வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. ஐசிசி இந்த ஒரேயொரு போட்டி கொண்ட சிறப்பு டி20 தொடருக்கு ஏற்பாடு செய்திருந்தது. உலக அணிகளில் இருக்கும் வீரர்களும், உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுவதால், இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்தியாவின் சார்பில் தினேஷ் கார்த்திக் இதில் கலந்து கொண்டிருந்தார்.

நேற்று இரவு இப்போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற உலக லெவன் அணி, வெஸ்ட் இண்டீசை பேட் செய்ய அழைத்தது. தொடர்ந்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக எவின் லெவிஸ் 26 பந்தில் 58 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். தினேஷ் ராம்தின் 44 ரன்களும், மார்லன் சாம்யூல்ஸ் 43 ரன்களும் எடுத்தனர்.

உலக லெவன் அணியில் சச்சின் டெண்டுல்கரால் ‘உலகின் சிறந்த டி20 பவுலர்’ என ஐபிஎல் முடிந்த பிறகு பாராட்டப்பெற்ற ரஷீத் கான் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆனால், 4 ஓவர்களில் அவர் 48 ரன்கள் விட்டுக் கொடுத்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல், தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய அப்ரிடி (இப்படித் தான் ரொம்ப வருஷமா  சொல்றாங்க!) ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினார்.

இலக்கை நோக்கி களமிறங்கிய உலக லெவன் அணி, இவ்வளவு மோசமாக தோற்போம் என எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். தொடக்க வீரர்கள் லூக் ரோஞ்சி 0 ரன்னிலும், தமீம் இக்பால் 2 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 0 ரன்னிலும், சாம் பில்லிங்ஸ் 4 ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க 8 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது.

அதன்பின், திசாரா பெரேரா மட்டும் சற்று தாக்குப்பிடித்து 37 பந்தில் 61 ரன்கள் திரட்டினார். அப்ரிடி 11 ரன்களில் திருப்திப்பட்டுக் கொண்டார். இதனால், அந்த அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டும் எடுத்து, 72 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

முன்னதாக, போட்டி தொடங்கிய போது, தனது கடைசி சர்வதேச போட்டியில் ஆடிய அப்ரிடிக்கு அனைத்து வீரர்களும் வரிசையாக நின்று மரியாதை அளித்தனர்.

×Close
×Close