உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்று இந்திய வீரர் அமித் பங்கால் புதிய வரலாறு!

உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கத்தை இழந்தாலும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்க மகனாக அமித் ஜொலிக்க அதிக வாய்ப்புள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், 52 கி உடல் எடை இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்ற உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கி உடல் எடைப் பிரிவில் பங்கேற்ற அமித் பங்கால், சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.


இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் Shakhobidin Zoirov-ஐ எதிர்த்து களமிறங்கினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 30-27 30-27 29-28 29-28 -29-28 என்ற புள்ளிக்கணக்கில் சொய்ரோவ், அமித்தை வீழ்த்தி உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றினார்.

தோல்வி அடைந்தாலும், உலக ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் எனும் பெருமையை அமித் பங்கால் பெற்றுள்ளார்.

இதுவரை உலக சாம்பியன்ஷிப்பில் விஜேந்தர் சிங்(2009), விகாஸ் கிருஷ்ணன் (2011), சிவ தாபா (2015), கவுரவ் பிதுரி (2017) ஆகியோர் அதிகபட்சமாக வெண்கலம் மட்டுமே வென்றிருந்தனர்.

வெள்ளி வென்ற முதல் இந்தியர் அமித் பங்கால்

ஹரியானா மாநிலம் மைனா கிராமம்தான் 23 வயதான அமித் பங்காலின் சொந்த ஊர். மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றபோது அனைவரது கவனத்தையும் ஈர்த்த அமித், 2009-ம் ஆண்டு நடந்த ஜூனியர் பிரிவுகளுக்கான போட்டியில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்துள்ளார். 25-வது தேசிய சப் ஜூனியர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் அனைவரது கவனமும் இவர் மீது திரும்பியது. 2017-ல் நேஷனல் பாக்ஸிங் சாம்பியனில் அறிமுகமான அமித், முதல் தொடரிலேயே தங்கப்பதக்கத்தை தட்டி வந்தார். அடுத்தது ஆசிய அமெச்சூர் குத்துச்சண்டை போட்டி அதே வருடம் உஸ்பெஸ்கிஸ்தானில் நடந்தது. அதில் வெண்கலப் பதக்கம் வென்ற அமித், 2018-ல் பல்கேரியாவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் தங்கம் என அதகளப்படுத்தினார்.

தங்கப் பதக்கங்கள் மட்டுமல்ல 2016-ல் ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற உஸ்பெஸ்கிஸ்தானின் ஹசன்பாய் துஸ்மாடோவை வீழ்த்தி கவனம் பெற்றார். பல முன்னணி வீரர்களுடன் சிறப்பாக விளையாடியுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கத்தை இழந்தாலும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்க மகனாக அமித் ஜொலிக்க அதிக வாய்ப்புள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close