உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 19வது லீக் போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டின் அசத்தல் மற்றும் அதிரடி சதத்தால், வெஸ்ட்இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
உலககோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. சவுத்தாம்டனில் நேற்று ( ஜூன் 14ம் தேதி) நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன், முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
வெஸ்ட் இண்டீஸ் திணறல் : இங்கிலாந்து பவுலிங்கை சமாளிக்க முடியாமல், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினர். கெயில் (36)அதிரடி காட்டாமல், நிலைத்து ஆடிய ஆட்டம், அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. ரசலும் (21)ஏமாற்றமே அளித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. பூரன் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்சர் மற்றும் மார்க் வுட் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இங்கிலாந்து அசத்தல் ஆட்டம் : 213 ரன்கள் என்ற எளிய இலக்கை கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி 33.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 213 ரன்களை எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோ ரூட் சதமடித்த நிலையில், ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
வெ.இ. தரப்பில் கேப்ரியல் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணி தற்போது வரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3 வெற்றிகளையும், ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியுள்ள 4 போட்டிகளில் 1 வெற்றியும், 2 தோல்வியும் 1 போட்டி மழையின் காரணமாக தடைபட்டதால், 1 புள்ளி என மொத்தம் 3 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.