கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: பிடிப்பட்ட கொலையாளி...போலீஸ் அதிர்ச்சி!

கொலை செய்த பின் கையுறையை தீயிட்டு கொளுத்தியிருக்கிறார். ஆனால், ஒருவிரல் மட்டும் எரியாமல் இருந்ததால், போலீசார் அந்த தடயத்தை கைப்பற்றி ஆய்வு செய்ததில் மாட்டிக் கொண்டார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இறந்தபிறகு, அவரது மரணம் குறித்த மர்மங்களின் முடிச்சு இன்னும் அவிழ்க்கப்படவே இல்லை. அஇதிமுக-வின் தீவிர விசுவாசியாக இருந்த வந்த ஓ.பன்னீர்செல்வம், திடீரென அக்கட்சியில் இருந்து பிரிந்த வந்த பின், ‘அம்மாவின் மரணம் குறித்து விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்கப்படும்’ என பரபரப்பு கிளப்பினார். மக்களுக்கு அம்மாவின் மரணத்தை பற்றிய சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது என்றார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, முதல்வராக இருந்த பன்னீர் செல்வமே, கட்சியில் இருந்து பிரிந்த பின், வெளியிட்ட இந்த அறிக்கையின் மூலம், மக்களுக்கு அந்த மரணத்தின் மீதான சந்தேகம் மேலும் அதிகமானது.

அதற்குள், பன்னீர் செல்வத்தின் முதல்வர் பதவி பறிபோய், கட்சி ஒன்றாய், இரண்டாய், மூன்றாய், நான்காய்…. சிதறுண்டதிலிருந்து, தற்போது டிடிவி தினகரன் கைது வரை நாம் அனைவரும் அறிந்ததே. இந்த அரசியல் பரபரப்பிற்கு இடையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவின் காவலாளி ஓம் பகதூர், கடந்த திங்கட் கிழமையன்று அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று ஆனந்த விகடன் வெளியிட்டுள்ள செய்தியில், “ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக தங்கும் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி, ஓம் பகதூரை வெட்டிக் கொன்றது சக காவலாளி கிருஷ்ண பகதூர் தான்” என குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தன்று, ஓம் பகதூர் கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகில் கிருஷ்ண பகதூர் படுகாயங்களுடன் கிடந்தார். இதனால், மர்ம நபர்கள் அவரைக் கொன்றுவிட்டு ஏதேனும் பொருட்களை கொள்ளையடிக்க முயன்றனரா, அல்லது முக்கிய ஆவணங்கள், கோப்புகளை திருட முயன்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

ஆனால், போலீஸ் நடத்திய அதிரடி விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, சக காவலாளி கிருஷ்ண பகதூர், கையுறை அணிந்து ஓம் பகதூரை வெட்டிக் கொன்றுள்ளார். பின்னர், கையுறையை தீயிட்டு கொளுத்தியிருக்கிறார். ஆனால், ஒருவிரல் மட்டும் எரியாமல் இருந்ததால், போலீசார் அந்த தடயத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

ஆய்வின் முடிவில் அந்த கையுறையில் இருந்த கைரேகை, காவலாளி கிருஷ்ண பகதூர் கைரேகையுடன் பொருந்தியது. இதனால், கிருஷ்ண பகதூர் தான் குற்றவாளி என்பது நிரூபணமாகியுள்ளதால், போலீசார் அவரை கைது செய்ய உள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

×Close
×Close