பரபரப்பான சூழலில் தமிழக சட்டசபை 14ம் தேதி கூடுகிறது

பரபரப்பான சூழலில் தமிழக சட்டசபை கூட்டம் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் ஜி.எஸ்.டி. மசோதா, விவசாயிகள் பிரச்னை, வறட்சி குறித்து பரபரப்பாக விவாதிக்கப்படலாம்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் மாதம் 16ம் தேதி தொடங்கியது. நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் 24ம் தேதி முடிந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தாமலேயே சட்டமன்ற கூட்டத்தொடரை கவர்னர் முடித்து வைத்தார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் சட்டப்பேரவையில் பொறுப்பு செயலாளரான பூபதி, ‘ஜூன் 14ம் தேதி சட்டப்பேரவை கூடும்’ என அறிவித்துள்ளார். கூட்டத்தொடர் எத்தனை நாள் நடக்கும். எந்தெந்த தேதியில் மானிய கோரிக்கைகள் நடக்கும் என்பதை 14ம் தேதி மாலை நடக்கும் அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும்.

ஆளும் அதிமுக ஏற்கனவே இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அதிமுக அம்மா அணியின் துணைப் பொது செயலாளரான டிடிவி.தினகரன், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற லஞ்சம் கொடுத்த வழக்கில் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர், தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.

அவர் கட்சி பணியாற்றுவது குறித்து, ‘முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும்’ என அமைச்சர் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே அதிமுக அம்மா அணி இரண்டாக பிளவுபட்டுள்ளதாகவே தெரிகிறது. டிடிவி.தினகரனை செயல்படவிடாமல் செய்தால், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் குழப்பம் ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்து ஆறு மாதங்கள் இன்னமும் முடியவில்லை. எனவே பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது. ஆனால் மானிய கோரிக்கைகள் மீது வெட்டு தீர்மானம் கொண்டு வந்து அவற்றை நிறைவேறவிடாமல் செய்ய முடியும் என மூத்த எம்.எல்.ஏ ஒருவர் கருத்து தெரிவித்தார்.

×Close
×Close