18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு: தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு

டிடிவி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு கூறப்படும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.

சென்னை ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ. டிடிவி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் தங்கத் தமிழ்ச் செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, தகுதியிழந்த எம்.எல் ஏ. க்கள் 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த நீதிபதி துரைசாமி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ. க்களின் தொகுதியை காலியாக அறிவித்து, தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்று தேர்தல் ஆனையத்துக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

அதன்பின்னர், இந்த வழக்கு டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் கொண்ட முதல் டிவிசன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து, கடந்த ஜனவரி 23 ஆம் தீர்ப்பை தேதி குரிப்பிடாமல் தள்ளி வைத்தது.

இந்நிலையில், சென்னை சேர்ந்த தேவராஜன் என்பவர், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ. க்கள் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், 18 தொகுதிகளும் கடந்த 7 மாதங்களாக காலியாக உள்ளதால், அத்தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பது சிரமமாக உள்ளது. இதுசம்பந்தமாக, புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இத்தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி, 18 எம்.எல்.ஏ. க்கள் வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்பட வில்லை. உங்களைப் பற்றியும், நீதிமன்றம் பற்றியும் பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

அதற்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ‘ விமர்சனம் தொடர்பாக எங்களுக்கு கவலை கிடையாது. எப்போது தீர்ப்பு கூற வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். 18 எம்.எல்.ஏ. க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு கூறப்படும் என்று தெரிவித்தார்.

அதன் பின்னர், தேவராஜன் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close