2019ல் ஆட்டம் மாறும்; பொறுத்திருந்து பாருங்கள் - விஷால்

நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்

கடந்த ஒன்றரை மாதமாக திரைத் துறையில் நடந்து வந்த போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளான 50% வி.பி.எஃப் கட்டணக் குறைப்பு, திரையரங்குகள் கணினி மயமாக்கல், ஆன்லைன் டிக்கெட் புக்கிங் கட்டண குறைப்பு எனத் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறப்பட்ட சூழ்நிலையில் இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா? என்று என்னிடம் கேட்கிறார்கள். நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். தவறு என்னவெனில், மக்கள் இதை தவறாக புரிந்து கொண்டுவிட்டனர். நான் செய்வது சமூக சேவை. ஒருவர் எப்போது சமூக சேவையில் ஈடுபடுகிறாரோ, அப்போதே அவர் அரசியல்வாதி என்றே அழைக்கப்படுவார். நான் இரண்டு சங்கங்களிலும் அரசியலில் இருப்பதாகவே உணர்கிறேன். 2019ல் ஆட்டம் மாறும். தற்போதைக்கு, எனக்கு இருக்கும் பணிகளை முதலில் முடிக்க வேண்டும். அதற்கு பிறகு நடக்கவிருப்பதை நீங்களே பொறுத்திருந்து பாருங்கள்.

ஆர்.கே.நகரில் நான் தோற்கவில்லை. ஜனநாயகம் தோற்றுவிட்டது. முதன் முறை ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தலுக்கு இரண்டாவது முறையாகவும் அதிமுகவின் வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டதை நான் பார்த்தேன். அப்போதே நான் யோசித்தேன்.. இனிமேல் என் அறையில் உட்கார்ந்து இருக்கக் கூடாது என்று. யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பதை நிரூபிக்க வேண்டும் என நினைத்தேன். எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதிகாரிகள் மாற்றப்பட்டனர். எனது வேட்புமனுவில் கையெழுத்திட்ட ஒருவர், பின்னர் ‘அந்த கையெழுத்து என்னுடைய கையெழுத்து அல்ல’ என்கிறார். இதை நான் ஒரு படத்தின் டைட்டிலாக வைக்கலாம் என்றே இருக்கிறேன்” என்று விஷால் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close