நகைக்கடைக்காரரிடம் இருந்து ரூ.1.11 கோடி ரூபாய் மதிப்புள்ள 300 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களுடன் கூட்டு சேர்ந்த போலீசார் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலியே பயிரை மேய்ந்த கதை என்று சொல்வார்கள் அதற்கு இன்னொரு உதாரணமாக ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், நகைக் கடைக்காரரிடம் ரூ.1.11 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களுடன் கூட்டு சேர்ந்த 2 போலீசார்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
“திருவள்ளூரைச் சேர்ந்த மஹேந்தர் என்பவர் திருவள்ளூரில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவர் நகைக்கடையில் நகைகளை விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல், தங்கக்கட்டிகளை வாங்கி நகைகளாக செய்து ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள சிறிய அளவிலான நகைக்கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று மஹேந்தர் கடந்த டிசம்பர் 11ம் தேதி தனது மகன் ஆஷிஷ் மற்றும் நகைக்கடை ஊழியர் ராஜ்குமார் உடன் 300 சவரன் தங்கத்தை எடுத்துக்கொண்டு ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கத்தில் உள்ள பொற்கொல்லர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது தீடீரென பைக்கில் வந்து வழிமறித்த கொள்ளை கும்பல் அவர்களைத் தாக்கி அவர்களிடம் இருந்த 300 சவரன் தங்கத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
மகேந்தர் இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில், 300 சவரன் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
தனிப்படை போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தியதில், கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளையும் அவர்களுடன் கூட்டு சேர்ந்திருந்த 2 போலீசாரையும் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் வட்டாரம் கூறியதாவது, மகேந்தரின் புகாரின் அடிப்படையில், ஸ்ரீபெரும்புதூர் காவல்துறை தனிப்படை போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை சேகரித்துள்ளனர். அதில், சந்தேகத்திற்குரியவர்களின் பைக்குகளின் பதிவு எண்களைக் கொண்டு அதன் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினர்.
சிசிடிவி காட்சிகளைக் கொண்டு நடத்திய விசாணையில், ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய செங்குன்றத்தைச் சேர்ந்த ரஞ்சித்ராஜ் (24), ராகுல் (20) ஆகிய இரண்டு பேர்களையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கத்தி முனையில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் இவர்களுடன் மானாம்பதி காவல் நிலைய போலிசார் தமிழரசன், திருக்கழுக்குன்றம் காவல் நிலைய போலீசார் கதிர் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. 2 போலிசாரும் இந்த கொள்ளை சம்பவத்துக்கு திட்டமிட்டு கொடுத்தது விசாரணையில் கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ரூ.1.11 கோடி மதிப்புள்ள 300 சவரன் தங்க நகைகளைக் கொள்ளை அடித்த சம்பவத்தில் ஈடுபட்ட ரஞ்சித்ராஜ், ராகுல், கதிரவன்(25), மாரிமுத்து (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் கூட்டு சேர்ந்து திட்டமிட்ட போலீசார் தமிழரசனும் கதிரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து இதுவரை 350 கிராம் தங்க நகையும் ரூ.8 லட்சமும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதற்கு முன்பு குற்ற வழக்குகளில் கைதான ரஞ்சித்ராஜ் மற்றும் ராகுலை போலீஸ் பாதுகாப்பில் அழைத்துச் செல்லும்போது, அவர்களுக்கும் போலீசார் தமிழரசனுக்கும் கதிருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. கொள்ளையர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு அவர்களை கொள்ளையடிப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் இன்னொரு முக்கியமான விஷயம், கொள்ளையர்களில் ஒருவராக கைதாகியுள்ள மாரிமுத்து தற்செயலாக எஸ்.ஐ உடற்தகுதி தேர்வில் தேர்வாகியுள்ளார். அதற்குள்ளாக அவர் இந்த நகைக் கொள்ளை சம்பவத்தில் சிக்கி சிறை சென்றுள்ளார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து காஞ்சிபுரம் எஸ்.பி சண்முகபிரியா கூறுகையில், “இந்த வழக்கில் தொடர்புடைய மேலும், 4 பேரைக் கண்டுபிடித்து கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் இதில் தொடர்புடைய இரண்டு போலீஸ்காரர்கள் மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் போலிசார் தெரிவித்தனர்.