குரங்கணி காட்டுத் தீ விபத்து வழக்கு: வனத்துறை அதிகாரிகள் 31 பேர் இடமாற்றம்!

குரங்கணி காட்டுத்தீ விபத்து வழக்கில் இதுவரை 31 வனத்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது குரங்கணி வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் டிரெக்கிங் செல்வதற்காக 35க்கும் மேற்பட்டோர் சென்றனர். அந்த நிகழ்வின்போது மார்ச் 11ம் தேதி எதிர்பாராத விதமாகக் காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் 36பேர் தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர்.

இயற்கையின் இந்த கோரத்தாண்டவத்தில் சிக்கியவர்களில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க மற்றவர்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்தனர். சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையிலும் 23 பேர் பரிதாபமாக பலியாகினர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, 2 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இதுவரை நடைபெற்ற விசாரணையில் வனத்துறையினர் மீது சில குற்றங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் தமிழக தலைமை வன அதிகாரி பசவராஜு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், மாவட்ட வன அலுவலர் உள்பட 31 பேரைப் பணியிட மாற்றம் செய்து, வனத்துறை முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் உத்தரவிட்டுள்ளார்.

×Close
×Close