நிமிடத்திற்கு நிமிடம் மாறும் காட்சிகள்; தினகரன் அணியில் குவியும் எம்.எல்.ஏ.க்கள்

சென்னை அடையாறில் டிடிவி தினகரனை மேலும் 13 எம்.எல்.ஏக்கள் இன்று சந்தித்து பேசியுள்ளனர். மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, பரமக்குடி எம்.எல்.ஏ. முத்தையா,செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன் உட்பட 13 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்துள்ளனர்.

ஏற்கனவே, 11 எம்.எல்.ஏக்கள் நேற்று தினகரனை சந்தித்த நிலையில், தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது.

இன்று தினகரனைச் சந்தித்த எம்.எல்.ஏ.க்கள் விவரம் வருமாறு:-

1. தூசி மோகன் (செய்யாறு), 2. பன்னீர்செல்வம் (கலசப் பாக்கம்), 3. முத்தையா (பரமக்குடி), 4. ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு), 5. செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), 6. பழனியப்பன் (பாப்பி ரெட்டிபட்டி), 7. தோப்பு வெங்கடாசலம் (பெருந்துறை), 8. மாரியப்பன் கென்னடி (மானாமதுரை).

தொடர்ந்து பேட்டியளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச் செல்வன், “கட்சியின் துணை பொதுச் செயலாளர் என்ற முறையில் தினகரனை நாங்கள் சந்தித்தோம்.  அதிமுகவில் பிளவு ஏதும் இல்லை. ஒரே அணியாகத் தான் செயல்பட்டு வருகிறோம்.  சிலரை அடையாளம் காட்டவே இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. தினகரனை ஒதுங்கிப் போகச் சொல்ல அமைச்சர் ஜெயக்குமாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எதன் அடிப்படையில் அவர் அந்த அறிக்கையை வெளியிட்டார்? ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் செய்தி வரும். இன்னும் தினகரனின் ஆதரவு பெருகும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உட்பட 9 மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

×Close
×Close