Advertisment

'5 ரூவா டாக்டர்' திருவேங்கடம் மரணம் - கண்ணீரால் அஞ்சலி செலுத்தும் வடசென்னை

5 Rs Doctor V Thiruvengadam Passed away: 'மெர்சல்' படத்தில் விஜய் ‘5 ரூபாய் டாக்டராக’ நடித்தது மருத்துவர் திருவேங்கடத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்து தான்

author-image
WebDesk
New Update
5 rs doctor thiruvengadam vada chennai

இவரது மனைவி ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்

வடசென்னையில் ரூ.5 மட்டும் கட்டணம் பெற்று மருத்துவத் தொண்டூழியம் புரிந்த மருத்துவர் திருவேங்கடம் (70) காலமானார். வியாசர்பாடியில் பல்லாண்டு காலம் ரூ.2 கட்டணம் வசூலித்து மருத்துவம் பார்த்து, பின்பு வெறும் ரூ.5 மட்டும் உயர்த்தி பலருக்கும் சிகிச்சை அளித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

யார் இந்த மருத்துவர் திருவேங்கடம்?

1973 ஆம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்த திருவேங்கடம், சில காலம் சென்னை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றினார். பின், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் மூலம் பெட்ரோலியத் துறை சார்ந்த பல்வேறு தொழிலாளர்களுக்குத் தனது மருத்துவச் சேவையை அளித்து வந்தார்.

இவரது சேவையை பாராட்டி, 2017-ம் ஆண்டுக்கான ‘சிறந்த மனிதர்’ விருதை வழங்கிக் கவுரவித்துள்ளது வி.ஐ.டி. கல்வி நிறுவனம்.

என்றும் புன்னகை தவழும் முகம், அன்பு மிகுந்த வரவேற்பு, இயன்றவர்களுக்கு மருத்துவர், இயலாதவர்களுக்கு 'இலவச மருத்துவர்'.  இதனாலேயே 'ஏழைகளின் நண்பன்' என்று மக்களால அழைக்கப்பட்டார்.

'மெர்சல்' படத்தில் விஜய் ‘5 ரூபாய் டாக்டராக’ நடித்தது இவரை இன்ஸ்பிரேஷனாக வைத்து தான்.

5 ரூபாய்க்கு சிகிச்சை சாத்தியமானது எப்படி?

மருத்துவம் வியாபாரமாகிவிட்ட இந்தக் காலத்தில் இலவச மருத்துவ சிகிச்சை சாத்தியமா என்று கேட்டால், 'நிச்சயம் சாத்தியம்தான்' அவரே முன்பொருமுறை நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

அதில், "நாம் பயன்படுத்தும் மருந்துகளில் 90 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்நாட்டு மருந்து உற்பத்தியை நாம் மேம்படுத்த வேண்டும். மேலும் ஈ.சி.ஜி., அல்ட்ரா சவுண்ட் போன்ற பரிசோதனைகளை 10 ரூபாய் முதல் 50 ரூபாய்க்குள் அளிக்க வேண்டும். இவையே இலவச மருத்துவத்தை விரிவுபடுத்துவதற்கான முதல் படி" என்கிறார்.

மருத்துவர் திருவேங்கடம் கனவு

'வியாசர்பாடி குடிசைப் பகுதி மக்களுக்கு என்று ஒரு மருத்துவமனை கட்டி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே என் கனவு' என்று மருத்துவர் திருவேங்கடம் அடிக்கடி கூறுவதுண்டு.

குடும்பம்

இவரது மனைவி ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகன் தீபக் மற்றும் மகள் ப்ரீத்தி மொரீஷியஸில் மருத்துவம் படித்துள்ளனர். திருவேங்கடத்துடன் படித்த மற்றவர்கள் வெளிநாட்டில் மருத்துவர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பணத்தினை பெரிய பொருட்டாக கருதாமல், மக்களின் அன்பினை மட்டும் பெற்று மகத்தான மருத்துவ சேவையாற்றி வந்த நம் நிஜ ஹீரோ திருவேங்கடம் உயிரிழந்த சம்பவம் அனைவரிடம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment