Advertisment

வேறு மாநிலத்தில் படித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் 500 எம்பிபிஎஸ் இடங்கள்

வேறு மாநிலத்தில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் சுமார் 500 பேர் சொந்த மாநில உரிமையின் அடிப்படையில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
வேறு மாநிலத்தில் படித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் 500 எம்பிபிஎஸ் இடங்கள்

வேறு மாநிலத்தில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் சுமார் 500 பேர் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சொந்த மாநில உரிமையின் அடிப்படையில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

Advertisment

நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நாடு முழுவதும் பரவலாக இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. ஆனாலும், மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது, அதனையடுத்து, நாடு முழுவதும் நீட் தேர்வு இந்த ஆண்டு நடத்தப்பட்டது.

அப்போது பின்பற்றப்பட கடுமையான நிபந்தனைகளால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். அதே போல, இத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்பட்டன. இது மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு தேர்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் பின் தங்கியிருந்தனர். குறிப்பாக மாநில சமச்சீர் கல்வி முறையின் கீழ் படித்த மாணவர்களில் தேர்வானவர்கள் மிக மிகக் குறைவு. நீட் தேர்வுக்கு பெரும்பாலானோர் இன்றளவும் எதிர்ப்பே தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்களை உள் ஒதுக்கீடாக ஒதுக்கியும், மீதம் உள்ள 15 சதவீத இடங்கனை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட இதர பாட திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் தர்னீஷ்குமார், சாய் சச்சின் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு தமிழக மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதனால், ஜூலை 17-ம் தேதி நடைபெறவிருந்த கலந்தாய்வும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில், வேறு மாநிலத்தில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் சுமார் 500 பேர் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சொந்த மாநில உரிமையின் அடிப்படையில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

மருத்துவ கல்வி இயக்குநரகத்திடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் படி, அரசு ஒதுக்கீட்டின் கீழ் சொந்த மாநில உரிமையின் அடிப்படையில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு சுமார் 47 மாணவர்கள் சேர்ந்திருந்தனர். ஆனால், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 500-ஆக உயரவுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பயின்ற 58 பேர், கேரளா மாநிலத்தில் பயின்ற 44பேர், ஆந்திர மாநிலதில் பயின்ற 17 பேர், இதர மாநிலங்களில் பயின்ற மாணவர்கள் 381 பேர் என மொத்தம் 500 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது கிட்டத்தட்ட 11 மடங்கு உயர்வாகும். மாநிலம் முழுவதும் உள்ள 22 தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 10 சுயநிதி கல்லூரிகளில் உள்ள 85 சதவீத அரசு ஒதுக்கீட்டின் கீழ் இவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 3,609-ஆக இருந்த அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நடப்பாண்டில் 3,377-ஆக குறைந்துள்ளது. ஆனால், வேறு மாநிலத்தில் பயின்று, தமிழக அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 1.30 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இத்தகைய சூழலில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்பட ஆறு அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் அவர்கள், நீட்-ல் இருந்து நடப்பாண்டுக்காவது தமிழகத்துக்கு விலக்களிக்க கோருவார்கள் என தெரிகிறது.

Neet Mbbs Medical Admission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment