70 years friendship of Kalaignar Karunanidhi and perasiriyar K.anbazhagan
70 years friendship of Kalaignar Karunanidhi and perasiriyar K.anbazhagan : டிசம்பர் 19, 1922ம் ஆண்டு நாகை மாவட்டத்தில் உள்ள கொண்டந்தூர் பகுதியில் சொர்ணம் - மு. கல்யாணசுந்தரம் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் க. அன்பழகன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பயின்றார். 1941ம் ஆண்டு மறைமலை அடிகளார் நடத்திய தனித்தமிழ் இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட இவர் தன்னுடைய ராமைய்யா என்ற இயற்பெயரை அன்பழகன் என மாற்றிக் கொண்டார், 1943ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி நடத்தி வந்த தமிழ்நாடு மாணவர் மன்ற ஆண்டு விழாவில் பங்கேற்றார். அன்றைய நாளில் இருந்து கருணாநிதி 2018ம் ஆண்டு மறையும் காலம் வரை இருவரும் ஒன்றாகவே பயணித்தனர். இந்த 70 வருட அரசியல் நட்பு, இன்றைய நண்பர்களுக்கு எல்லாம் வாழ்நாள் இலக்கையே வகுக்க ஆரம்பித்திருக்கும்.
”முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது அண்ணாவின் தம்பி, ஐந்தாவது நான் கலைஞரின் தோழன்” என்று தான் தன்னை எப்போதும் அறிமுகம் செய்து கொள்வார் பேராசிரியர். கலைஞரோ எங்கே எப்போது பேசினாலும் அதில் பேராசிரியர் குறித்து அடிக்கடி மேற்கொள்காட்டினார். அவர்களின் நட்பு அத்தகையது.
2016ம் ஆண்டு நண்பர்கள் தின கொண்டாட்டத்தின் போது, தன்னுடைய சமூக வலைதள பக்க்கத்தில் பேராசிரியர் க. அன்பழகனும், கலைஞர் கருணாநிதியும் இருக்கின்ற புகைப்படத்தை பதிவு செய்து அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகளை பகிர்ந்திருந்தார்.
முதன்முதலாக இருவரும் சந்தித்த நாளை நினைவு கூறும் கலைஞர்
சென்னை பெரியார் திடலில், ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி, 2015ம் ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முதன் முதலாக கலைஞர், பேராசிரியரை சந்தித்த நாளை நினைவு கூறும் வீடியோ. அதில் “அண்ணாவால் பாரட்டப்பட்ட, அழைத்து வரப்பட்ட இளைஞர் யார்? என்னுடைய ஆருயிர் நண்பராக இதுவரையில் விளங்கிக் கொண்டிருக்கும் இனமான பேராசிரியர்” என்று கலைஞர் குறிப்பிட்டிருந்தார். தமிழ் மாணவர் மன்றத்தின் ஆண்டு விழாவில் பேராசிரியர் பங்கேற்றதையும் நினைவு கூறியிருந்தார்.
பேராசிரியரின் 91வது பிறந்தநாள் விழா
பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், திராவிட இயக்கத்தில் எனக்கு பெருந்துணையாக இருப்பவர் பெருந்தகை பேராசிரியர் என்று சொன்னால் அது மிகையாது என்று பேராசிரியரின் 91வது பிறந்தநாள் கூட்டத்தில் கலைஞர் கூறியுள்ளார். பேராசிரியருக்கு மாலை அணிவித்தால் அது எனக்கு நான் அணிவித்துக் கொண்ட மாலை. பேராசிரியருக்கு சால்வை அணிவித்தால் அது எனக்கு நானே போர்த்திக் கொண்டது. அந்த அளவுக்கு தாங்கள் இருவரும் நெடுங்கால நண்பர்களாக இருந்ததை குறிப்பிட்டு பேசியிருந்தார் கலைஞர்.
அண்ணா அறிவாலயத்தில் சிறப்பு
அண்ணா அறிவாலயத்தில் வெகு சில தலைவர்களின் பெயரில் மட்டும் தான் அரங்கங்கள் மற்றும் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறது. முதல் மனைவி வெற்றிச்செல்வி அன்பழகன் பெயரில் அண்ணா அறிவாலாயத்தில் கண் மருத்துவமனை இயங்கி வருகிறது. இது அன்பழகன் குடும்பத்தினர் மீது திமுகவினர் கொண்டிருக்கும் அன்புக்கும் பற்றுக்கும் முக்கியமான எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கிறது.
வாழ்வும் தொண்டும் புத்தக வெளியீட்டு விழாவில் கலைஞர் கருணாநிதி
வாழ்வும் தொண்டும் என்ற பெயரில் பேராசிரியர் க. அன்பழகன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலைஞர் கருணாநிதி பேசியது. ”பேராசிரியரின் இந்த புத்தகத்தை வெளியிடுவது நான் பெற்ற பெரும் பேராக கருதுகின்றேன்” என்று கலைஞர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
கண் கலங்கி நின்ற போது ஆறுதலாய் வந்த அன்பழகன்
கலைஞர் கருணாநிதிக்கும், க. அன்பழகனுக்கும் இருக்கும் நட்பு குறித்து நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த நட்பின் துவக்கப்புள்ளி ஆரம்பித்த இடம் திருவாரூர் தான். கலைஞரால் உருவாக்கப்பட்ட தமிழ் மாணவர் மன்றத்தின் ஆண்டு விழா 1942ம் ஆண்டு நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்க ஏராளமானவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த போதும் பெரும்பாலானோர் அந்த விழாவினை புறக்கணித்துவிட்டனர். அவர்கள் எல்லாம் வருவார்கள் என்று திருவாரூர் ரயில்நிலையத்தில் காத்துக் கொண்டிருந்து கண் கலங்கியிருந்த நேரம் தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த அன்பழகனும், மதியழகனும் வந்து எனக்கு ஆறுதல் வழங்கினார்கள் என்று கருணாநிதி பல மேடைகளில் பல்வேறு தருணங்களில் நினைவு கூறியுள்ளார்.