Advertisment

மாநில பாடத்திட்ட மாணவர்கள் டாக்டராக முடியாது : கோர்ட் உத்தரவால் சிக்கல்

எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் 85 சதவீத ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பதால், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களின் கதி என்ன? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
medicos

எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் 85 சதவீத ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பதால், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களின் கதி என்ன? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நாடு முழுவதும் ஒரே தேர்வாக, ‘நீட்’ கொண்டு வரப்பட்டது. இதற்கு தமிழகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் கொடுக்கவில்லை.

தமிழகத்தில் ‘நீட்’டை அமல்படுத்தினால் கிராமப்புற மற்றும் மாநில பாடத்திட்ட மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறி தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டமும் நடத்தின. எனவே மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் 85 சதவிகித இட ஒதுக்கீடை அவர்களுக்கு வழங்கி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சுமார் 3000 மெடிக்கல் சீட்களில் 15 சதவிகித அகில இந்திய கோட்டாவை கழித்தால், 2550 சீட்கள் மாநில கோட்டாவுக்கு வரும். இதில் 85 சதவிகித இடங்கள் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கும், 15 சதவிகித இடங்கள் மத்திய பாடத்திட்ட மாணவர்களுக்கும் கிடைக்கும். ‘நீட்’ தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இவர்களுக்கான ‘ரேங்க் லிஸ்ட்’ தயார் செய்யவும் மருத்துவக் கல்வித்துறை ஆயத்தமாக இருந்தது.

dr. டாக்டர் பாலகிருஷ்ணன், டாக்டர் ரவிந்திரநாத்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டிலும் இதே ரீதியில் மாணவர் சேர்க்கை நடைபெற இருந்தது.

இந்தச் சூழலில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து மத்திய பாடத்திட்ட மாணவர்கள் சிலர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். வருகிற 17-ம் தேதி தொடங்கவிருந்த எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு, இந்த வழக்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது புதிய ரேங்க் லிஸ்ட் தயார் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாலும், மேல் முறையீடு செய்யவிருப்பதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளதாலும் கலந்தாய்வும், மாணவர் சேர்க்கையும் இன்னும் தள்ளிப் போகும் என்றே தெரிகிறது.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறுகையில், “இந்த வழக்கில் தமிழக அரசு அப்பீல் செய்தாலும், உச்சநீதிமன்றம் அதை ஏற்கும் வாய்ப்பு குறைவு. காரணம், இட ஒதுக்கீடு என்பதே 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என உச்சநீதிமன்ற உத்தரவு இருக்கிறது. தமிழ்நாட்டில் சமூக ரீதியிலான 69 சதவிகித இட ஒதுக்கீடு அரசமைப்பு சட்ட அட்டவணையில் சேர்க்கப்பட்டதால், இன்னமும் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. அதே போன்ற விதிவிலக்கு ‘நீட்’டுக்கு கிடைக்கும் வாய்ப்பு இல்லை.

ஒருவேளை 85 சதவிகித இட ஒதுக்கீடை மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு அனுமதித்தாலும்கூட, அவர்களுக்கு அது போதுமானது இல்லை என்பதுதான் எனது கருத்து. ஏனென்றால், தமிழகத்தில் ‘நீட்’ எழுதியவர்களில் 2 சதவிகிதம் பேர்தால் மத்திய பாடத்திட்ட மாணவர்கள். அவர்களில் 6 சதவிகிதம் பேர் (சுமார் 7000 பேர்) தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இந்த 6 சதவிகிதம் பேருக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு என்பது அதிகம். அதேசமயம், மேற்படி 85 சதவிகித இட ஒதுக்கீடும் இல்லாதபட்சத்தில் இந்த 7000 பேரும்தான் தமிழகத்தில் உள்ள மொத்த மெடிக்கல் சீட்களையும் ஆக்கிரமிப்பார்கள்.

எனவே இதற்கு தீர்வு, ‘நீட்’டுக்கு விலக்கு கேட்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஒப்புதலை பெறுவது மட்டும்தான். இல்லாதபட்சத்தில் மாநில பாடத்திட்ட மாணவர்கள், மெடிக்கல் கனவை மறந்துவிட வேண்டியதுதான்!” என ஆதங்கப்பட்டார் ரவீந்திரநாத்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் பாலகிருஷ்ணனிடம் இது குறித்து கேட்டோம். “முதுநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை தொடர்பான ஒரு வழக்கில், மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு நீதிமன்றங்கள் திடீரென தடை விதிப்பதை தவிர்க்கவேண்டும் ஒரு அறிவுறுத்தலை உச்சநீதிமன்றம் வழங்கியது. எனவே இந்த வழக்கு மேல்முறையீடுக்கு சென்றால், அரசுத் தரப்புக்கு சாதகமாக முடிவு கிடைக்கலாம். மாநில கோட்டாவுக்கு ஒதுக்கப்பட்ட சீட்களில்தான் 85 சதவிகித இடங்களை மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு அரசு ஒதுக்கியது. அதுவே மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு ஓரளவுதான் நிவாரணம். இப்போது அதுவும் இல்லையென்றால், மாநில பாடத்திட்டத்தில் படித்து முடித்திருக்கும் மாணவர்களும், இப்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். தமிழக அரசின் ‘நீட்’ விலக்கு சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுப்பதுதான் இதற்கு தீர்வு!

இந்த சட்டப் போராட்டம் காரணமாக கவுன்சலிங்கும், மாணவர் சேர்க்கையும் தள்ளிப் போகிறது. இது கல்லூரி வேலை நாட்களில் சிக்கலை உருவாக்கும். அதை சரி செய்யவும் அரசு புதிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டியிருக்கும்.” என்றார் டாக்டர் பாலகிருஷ்ணன்.

தமிழக கல்வித்துறை என்ன செய்யப் போகிறது?

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment