Advertisment

எம்.ஐ.டியில் பட்டம்; சிங்கப்பூர் வங்கியில் உயர் அதிகாரி; தமிழக நிதி அமைச்சர் குறித்து ஒரு பார்வை

ஒரு மனிதனின் வாக்கு சுத்தமாக இருப்பதைப் போன்றே, ஒரு அரசாங்கமும் அதன் கடமைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் - மோடியின் கொள்கையை கடுமையாக விமர்சித்த நிதி அமைச்சர்

author-image
WebDesk
New Update
எம்.ஐ.டியில் பட்டம்; சிங்கப்பூர் வங்கியில் உயர் அதிகாரி; தமிழக நிதி அமைச்சர் குறித்து ஒரு பார்வை

 Arun Janardhanan

Advertisment

தமிழக நிதித்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பழனிவேல் தியாகராஜன். இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பொறியியல் படிப்பையும் மேலாண்மை படிப்பையும் படித்து பட்டம் பெற்றவர். வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி, வெளிநாட்டிலேயே திருமணம் செய்து கொண்டு தாயகம் திரும்பிய அவர், பிரபலமான எம்.எல்.ஏவாக மாறியுள்ளார். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட திமுகவில் ஆகச்சிறந்த மீனாட்சி பக்தராக வலம் வருகிறார் இவர்.

பழனிவேல் தியாகராஜன் அல்லது பி.டி.ஆர் என்று அனைவராலும் அறியப்படும் அவரின் படிப்பு பின்னணி பிரமிக்க வைக்கிறது. சிறப்பான வேலை இருந்தும் 55 வயதான அவருக்கு வாழ்வில் திருப்புமுனையாக அரசியல் அமைந்துள்ளது. திருச்சி என்.ஐ.டியில் பொறியியல் பட்டம் பெற்ற, அமெரிக்காவின் நியூயார்க் மாகாண பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி மற்றும் எம்.ஐ.டியின் ஸ்லோவன் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மேலாண்மை பட்டம் பெற்றவரை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நிதி அமைச்சராக அறிவித்துள்ளார்.

அவருக்கான அரசியல் வளர்ச்சியில் இது மிக முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது. 1930களில் சென்னை மாகாண முதல்வராக அவருடைய தாத்தா பி.டி. ராஜன் பணியாற்றினார். பழனிவேல் தியாகராஜனின் தந்தை பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் திமுக அமைச்சராக செயல்பட்டார். மதுரை மத்திய தொகுதியில் 34,176 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த பழனிவேல் தியாகராஜன் தற்போது நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய பி.டி.ஆர் எப்போதும் தன் தொகுதி மக்களின் தேவைக்கு முதல் ஆளாக சென்று நிற்பார். ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை தொகுதி நிலவரம் குறித்து அறிக்கை சமர்பிப்பார். அவருக்கு ஒரு செயலை முடிக்க போதுமான நேரம் கொடுத்தால் அதை அவர் கச்சிதமாக முடிப்பார் என்பதை ஸ்டாலின் அறிந்து வைத்திருக்கிறார் என்று அமைச்சர் பதவி ஏற்ற மற்றொரு அமைச்சர் கூறினார்.

1987ம் ஆண்டு அமெரிக்காவிற்கு சென்று 20 வருடங்கள் கழித்து சொந்த ஊர் திரும்பினார் பி.டி.ஆர். படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவிலேயே வேலை பார்த்தார். உடன் படித்த மாணவியை திருமணம் செய்து கொண்டார். 2011ம் ஆண்டு சிங்கப்பூருக்கு சென்ற அவர், அங்கு உள்ள வங்கியில் உயர் அதிகாரியாக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். 2015ம் ஆண்டு நாடு திரும்பிய அவர் ஒரு வருடம் கழித்து மதுரை மத்திய தொகுதியில் நின்று ஜெயித்தார். சென்னையில் தன் மனைவி மார்க்ரெட் ராஜன் மற்றும் பள்ளி செல்லும் மகன்கள் பழனி தியாக ராஜன் மற்றும் வேல் தியாகராஜனுடன் வசித்து வருகிறார். பதவி ஏற்பு விழா முடிந்த பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசியவர் அவர்கள் தான் தன்னுடைய வாழ்க்கை என்றும், பொதுமக்களுக்காக சேவை செய்வதை நான் எப்போதும் விரும்புகிறேன் என்றும் கூறினார்.

மேலும் படிக்க : “ஜெயலலிதாவாகிய நான்”…“முக ஸ்டாலின் ஆகிய நான்”… எதிர்க்கட்சியினர் நடத்தப்பட்ட விதத்தில் மாபெரும் மாற்றம்

அவரது நிகழ்ச்சி நிரலில் உள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, தமிழகத்தின் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசிடம் இருந்து வாங்கித் தருவது. மோடி அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்த பி.டி.ஆர், ஒரு மனிதனின் வாக்கு சுத்தமாக இருப்பதைப் போன்றே, ஒரு அரசாங்கமும் அதன் கடமைகளை செயல்படுத்துவதில் அக்கறை செலுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. என்பது மாநிலங்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையேயான சட்டப்பூர்வ உறுதிப்பாடாகும். விவாதிக்க எதுவும் இல்லை” என்றார்.

மோடி அரசின் கீழ் மாநிலங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் பி.டி.ஆர் குற்றம் சாட்டினார். தமிழகம் ஒரு நல்ல மாநிலமாகும். நீங்கள் டெல்லியில் உட்கார்ந்து மக்களுக்காக முடிவுகளை எடுக்க முடியாது… அதிகாரப் பகிர்வு என்பது ஆட்சிக்கு அடிப்படையாகும், இது மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு மட்டுமல்ல, மாநிலத்திலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் செல்ல வேண்டும். உண்மையில், கேரளாவைப் பற்றி நாம் அதிகம் போற்றும் விஷயங்களில் ஒன்று, அங்கு நடைமுறையில் இருக்கும் அதிகாரப் பரவலாகும் என்றார்.

மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளில் இருந்து வேறுபடுவது குறித்து பேசிய அவர், பன்முகத்தன்மை மற்றும் சிக்கலான தன்மை காரணமாக ஒரே தீர்வோடு நம் நாட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முடிவுகள் தேட முடியாது. நம்முடைய சலூன் கடைகள் எப்போது திறக்கப்பட வேண்டும் என்பதை டெல்லி ஏன் முடிவு செய்ய வேண்டும்? நமக்கு ஒரு கட்டமைப்பு சிக்கல் உள்ளது, அதில் ஜிஎஸ்டி என்பது ஒரு அம்சம் மட்டுமே என்றார்.

தேர்தலுக்கு முன்பு கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் தமிழகத்தின் வளங்களை வற்றச் செய்கிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், மகப்பேறு விடுப்பை ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடமாக உயர்த்துவதாகவும், நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பாஸ் வழங்குவதாகவும், அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் ரூ .4,000 ரொக்க உதவி வழங்குவதாகவும் திமுக உறுதியளித்தது. (பிந்தைய இரண்டும் வெள்ளிக்கிழமை செயல்படுத்தப்பட்டது). எல்லா இலவசங்களும் மோசமானவை என்ற அனுமானத்துடன் நான் இதை கூறவில்லை. தினசரி அடிப்படையில் சில இலவசங்களை இரட்டிப்பாக்குவது அல்லது வழங்குவது குறித்தும் நான் சிந்திப்பேன். பள்ளி மாணவர்களுக்கு நான் இலவச உணவை கொடுக்க வேண்டாமா? நான் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்க வேண்டாமா? என்பதையும் நான் யோசிப்பேன் என்றார் அவர்.

ஒவ்வொரு நபருக்கும் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம்; ஒருங்கிணைந்த கழிவுநீர் அமைப்பு; மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலை புதுப்பித்தல் என்று மூன்று வாக்குறுதிகளை பி.டி.ஆர். தன்னுடைய வாக்காளர்களுக்கு வழங்கினார். மீனாட்சியம்மன் கோவிலுடனான தன் தொடர்பு ஆழமானது என்றார் அவர். 1963 ஆம் ஆண்டில், அவரது தாத்தா தான் அக்கோவிலின் கும்பாபிஷேகத்தை துவங்கி வைத்தார். இவர் இந்த கோவிலை புதுப்பிப்பார் என்று நம்புகிறார்.

பி.டி.ஆர் தனது நம்பிக்கைக்கும் திமுகவின் நாத்திக நிலைப்பாட்டிற்கும் இடையில் எந்த முரண்பாட்டையும் காணவில்லை என்று கூறினார். கலைஞர் கருணாநிதிக்கே தன்னுடைய தெய்வ நம்பிக்கை குறித்து தெரியும் என்றார். 2006ம் ஆண்டு என்னுடைய தந்தை மறைந்த பிறகு ஒவ்வொரு மாதமும் நான் கோவிலுக்கு செல்வேன் என்று உறுதி எடுத்தேன். எங்கிருந்தாலும் நான் கோவிலுக்கு செல்வேன். கடந்த 15 வருடங்களாக நான் கடைபிடித்து வந்த நம்பிக்கைகளில் அதுவும் ஒன்று. கொரோனா ஊரடங்கினால் ஒருமுறை அல்லது இருமுறை கோவிலுக்கு செல்லவில்லை. மீனாட்சி அம்மன் கோவில் இருப்பதால் தான் மதுரை மத்திய தொகுதியைக் கூட கேட்டேன் என்பது கலைஞருக்கும் தெரியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

உண்மையில், பி.டி.ஆரின் குடும்பம் கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுடனும் ஒரு தொடர்பைக் கொண்டுள்ளது, நீதிக் கட்சிக்குத் தலைமை தாங்கிய அவரது தாத்தா, 1950 களில் கோவிலில் ஏற்பட்ட ஒரு பெரிய தீ விபத்துக்குப் பிறகு ஐயப்ப சிலையை நன்கொடையாக கொடுத்தார். பந்தளம் மகராஜாவும் தலைமை பூசாரியும் ஜோதிடர் ஒருவரை சந்திக்க, அவர் என் தாத்தாவை வந்து பார்க்குமாறு கூறியிருக்கிறார் என்று தெரிவித்தார் பி.டி.ஆர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment