இலங்கையில் புதிய மசோதா: தமிழக மீனவர்கள் கொந்தளிப்பு

ரூ.50,000 அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் புதிய மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மற்றும் புதுவை மீனவர்களுக்கு ரூ.50,000 அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் புதிய மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்து செல்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், மீனவர்களின் பிரச்னைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.

இதனிடையே, இலங்கை மீன்வளத்துறையின் அனுமதி பெறாமல் ஆழ்கடலில் மீன்பிடித் தொழில் நடத்தும் இலங்கை மீனவர்களுக்கு அந்நாட்டு மதிப்புப்படி ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதேபோல், இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு அந்நாட்டு மதிப்புப்படி, ரூ.10 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்க அந்நாட்டு மீன்வளத்துறை சார்பில் யோசனை வழங்கப்பட்டு, புதிய சட்டத்தை தயாரிக்க குழு ஒன்றும் அண்மையில் அமைக்கப்பட்டது.

முன்னதாக,”தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன் பிடிப்பதால் இலங்கைக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இலங்கை கடற்படையினரின் அதிரடி நடவடிக்கைகளால், தமிழக மீனவர்களின் அத்துமீறல் தற்போது குறைந்துள்ளது. எனினும் இதனை முற்றிலும் கட்டுப்படுத்த புதிய மசோதா தாக்கல் செய்யப்படும்” என அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை கட்டுபடுத்தும் வகையில், ரூ.50,000 அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யும் புதிய மசோதா ஒன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இலங்கையின் இந்த சட்ட மசோதா தமிழக மீனவர்களிடையே பெரும் கொதளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close