Advertisment

துர்கா ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் உண்ணாவிரதத்தை ஜீயர் நிறுத்தினார் : ஜெகத்ரட்சகன் தகவல்

துர்கா ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் உண்ணாவிரதத்தை ஜீயர் நிறுத்தினார் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jegathratchahan, dmk mp

Tamil Nadu News Today Live

துர்கா ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் உண்ணாவிரதத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் நிறுத்தினார் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Advertisment

ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.ஜெகத்ரட்சகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்றல் காற்றுக்கு தமிழ்சொல்லிக் கொடுக்கும் தெளிவோடு, திரையிசை பாடல்களில் தேனூற்றி பிசைந்து திசையளாவி நின்ற கவியரசு கண்ணதாசன், ‘கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள், கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள், சூடிக்கொடுத்தாள், பாவை படித்தாள் சுடராக எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள்’ என்று அமுத பரிபாலனம் செய்தார்... அன்று.

இன்று... தமிழை ஆண்டாள் என்னும் ஆய்வுக்கட்டுரை ஒன்று இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம். உனக்கே நாம் ஆட்செய்வோம் என்று அகத்துறை உணர்வு நிலையின் உச்சம் தொட்டு, ஓங்கி உலகளந்த அந்த உத்தமியை ஒரு சில வரிகளால் அடாதன கூறி விமர்சித்த காரணத்தால் விழிகள் நனைந்து மொழிகள் குலைந்து அலமந்து நிற்கிறது, தமிழ்நாடு.

வானம்பாடிகளுக்கும் வழி சொல்லிக்கொடுக்கும் எமையொத்த வைணவப்புறாக்கள் அக்கட்டுரையை வாசித்த அளவிலேயே இறக்கை முறிந்தது போல் அலக்கண் உற்று அதிர்ந்து உதிர்ந்து ஆன்ம விசாரத்தில் அழுந்திப்போனாம் என்பது தான் உண்மை. ஆண்டாள் அவதரித்த மண்ணைத்தொட்டு அடக்கமாய் வணங்கி விட்டு திருப்பாவை யவ்வனத்தில் மூழ்கி திளைத்து முத்தெடுத்தாற்போல் பேசிய திருவாய் பிறகு எப்படி கூரிய வாள் கொண்டு எங்கள் சீரிய செந்தமிழ் பிராட்டியை சிறுமை செய்தது என்று சிந்தை நொந்து சிதிலமாகியது வைணவப் பேருலகம்.

ஆழிமழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல் என்னும் அற்புத பாசுரத்தில் அன்னை தமிழின் அழகு ஒழுகும் சிறப்பு எழுத்தான ழகரத்தை பதினொன்று இடங்களில் பாங்குற கையாண்ட எம்பைந்தமிழ் பாவைக்கு அமங்கல சொற்களை அணிவிக்க முயன்ற அவசரத்தின் அர்த்தம் புரியாமல் சகிப்புத் தன்மையில் சரித்திரம் படைக்கும் வைணவ சான்றோர்கள் வாடிப்போனார்கள். எதை நேசிக்கிறமோ, அதுவாகவே ஆகி விடும் அத்வைத நிலையின் அகராதி பொருள் அல்லவா ஆண்டாள். தரையில் கிடந்தாலும் வானமாய் வளர்ந்து மண்ணில் நடந்து பண்ணிற் சிறந்த பாவையல்லவா அவள்.

நாராயணனே நமக்கே பறை தருவான் என்று இரண்டு வார்த்தைகளில் இரண்டு ஏகாரங்களை வைத்து அவன் அருள் கிட்டும் என்று ஆணித்தரமாய் அறிவித்த எம் ஏகாரச்சீமாட்டியை ஆதாரம் இல்லாமல் சேதாரம் செய்ய முற்பட்ட ஆய்வுக்கு என்ன அவசியம் இப்போது? என்று அங்கங்கும் பதைத்தார்கள் வைணவ அன்பர்கள்.

ஆண்டாள் அன்னையின் கடவுள் பிரேமையில் ஒரு துளியாவது உணர்ந்தால் தான் ஆண்டாளை பற்றி எழுத முடியும் என்பார் எழுத்தாளர் பாலகுமாரன். அது எத்துணை நிஜம் என்பது இப்போது தான் புரிகிறது. பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானத்திலும் சிக்காத வெளிச்சங்கள் இன்னும் ஆண்டாளின் பாசுரங்களில் உள்ளன என்று ஒரு நூலுக்கான அணிந்துரையில் கருத்துரைக்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன். அதை நம் போன்ற சிறியவாச்சான் பிள்ளைகள் அறிந்துகொள்ள வேண்டும் என்று தான் சித்தரிக்க தோன்றுகிறது நமக்கு.

ஓர் அமெரிக்க ஆய்வு சொல்லிவிட்டது என்பதற்காக, நம் மண்ணின் மரபு சார்ந்த மனநிலையும், அழகியல் நுகர்வும், கவித்துவத்தின் ஆழ்நிலையும் தரிசனமும், அகப்பொருள் தத்துவத்தின் ஆழமும் மேலை நாட்டவர்களுக்கு புரியும் என்று எடுத்துக்கொள்வது பிழையால் நெய்த பிரேமை அல்லவா என்றும் கேட்க தோன்றுகிறது இயல்பு தானே.

மோகனப்பூச் சொற்களை வாகனமாக்கி முத்தமிழுக்கு சீதனம் தந்த செந்தமிழ் விறலியை பாராட்டப் புகுந்த ஒரு கட்டுரை, மற்றொன்று விரித்தல் என்னும் குற்றத்தில் தங்கியதை கூறாமல் இருக்க முடியுமா?. ஒரு பேச்சோ... கட்டுரையோ... வேள்வி நெருப்பாக இருக்கலாம். அலங்கார சொற்கள் அதில் நாத தெறிப்பாக ஒலிக்கலாம். ஆனால் ஆளப்படும் கருத்துக்கள் பொறுப்பாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் குறையொன்றும் இல்லை அல்லவா.

சில்லிட்டுப் போகிற சீதள வார்த்தைகளால் திருப்பாவை முப்பதும் செப்பிச் சிவந்த திருவாய்கள் அந்த அவதூறு பதிவுக்கு ஆட்சேபம் தெரிவித்ததும், அலட்சியமாய் ஆன்மிக குளத்தில் கல்லெறிந்தவர்கள் வருத்தம் தெரிவித்துவிட்டதால் அருந்தமிழை ஆண்ட ஆண்டாள் நாச்சியாரின் அடியார்களும், வயதுக்கு வந்த வாலிபத்தின் பூங்கொத்தாய் இதயத்தை வருடிக் கொடுக்கும் வண்ணமிகு வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்களாம் வைணவ சான்றோர்களும், அமைதி காக்க வேண்டுமாய் எளியேன் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வேண்டாம் இது போன்ற விபரீத ஆய்வுகள் என்று சுட்டிக்காட்டவும் அடியேன் கடமைப்பட்டு இருக்கிறேன்.

கடந்த 10 நாட்களாய் படர்ந்த வேதனையின் விளைவாய் உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு தம்மை வருத்திக்கொள்ள முனைந்த எம் வழிபாட்டுக்குரிய ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சுவாமிகள், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா விண்ணப்பித்து கேட்டுக்கொண்டதன் பேரில், தம் உண்ணா நோன்பை கைவிட்டுள்ளார்கள் என்பதையும் அனைவருக்கும் அறிவித்து மகிழ்கின்றேன்.

தீக்குச்சிகளை கிழித்துப் போடுவது எளிது. அது பற்றிக்கொள்ளும் போது தொற்றிக்கொள்ளும் அபாயத்தை எதிர்கொள்வது அத்துணை எளிதன்று. கால காலமாய் காலம் கற்பிக்கும் பாடம் இது. இதை அனைவரும் உணர்ந்து அடுத்த நொடிகளில் அவசரமற்று நிதானமாய் அடி வைக்க வேண்டும், அமைதி காக்க வேண்டும் என்று ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன். எரியும் பிரச்சினை இத்தோடு முடியட்டும், இணையற்ற தமிழரசி ஆண்டாள் புகழ் ஓங்கட்டும். உணர்வுகளை சீண்டாத ஆய்வுகள் மலரட்டும், உண்மைக்கு புறம்பான ஆயுதங்கள் அழியட்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

 

Kavignar Vairamuthu Durga Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment