எதெற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடாகிவிடும்! ரஜினிகாந்த் திட்டவட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடை தொடர்ந்து ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். பாதிக்கப்பட்ட மக்களை நான் சந்தித்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றார் ரஜினி.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடை தொடர்ந்து ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். பாதிக்கப்பட்ட மக்களை நான் சந்தித்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றார் ரஜினி.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள், 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் நோக்கி நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் கடந்த 27ம் தேதி வரை தூத்துக்குடி முழுவதும் 144 தடை உத்தரவு அளிக்கப்பட்டிருந்தது.

தூத்துக்குடியில் தற்போது 144 தடை நீங்கியுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க இன்று தூத்துக்குடி செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார்.

ரஜினிகாந்த் தூத்துக்குடி பயணம் குறித்த LIVE UPDATES:

4.30 PM : தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் தூத்துக்குடியில் அளித்த பேட்டியையொட்டி, ‘‘சமூக விரோதிகள் என்று எப்படி சொல்கிறீர்கள்?’’ கேள்வி எழுப்பினர். அப்போது அவேசமான ரஜினி, ‘‘தூத்துக்குடியில் போராட்டத்தில் வன்முறை வெடிக்க காரணம் சமூக விரோதிகள்தான். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எப்படி சமூக விரோதிகள்
புகுந்து வன்முறையில் ஈடுபட்டார்களோ அப்படித்தான் தூத்துக்குடி சம்பவத்திலும் நடந்தது. போலீசாரை அடித்ததும் அவர்கள்தான். கலெக்டர் அலுவலகத்தை தீ வைத்து கொளுத்தியதும் அவர்கள்தான். இது எப்படி தெரியும் என்று என்னிடம் கேட்க வேண்டாம். எனக்குத் தெரியும். போலீசாரை தாக்கிய சமூக விரோதிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும். இந்த பிரச்னை உருவானதே போலீசாரை அடித்த பின்னர்தான். சமூக விரோதிகள் போலீசாரை தாக்கினார்கள். அதன் பின்னர்தான் பிரச்னை உருவானது. யூனிபார்மில் இருக்கும் காவல்துறையினரை அடித்தால் நான் விட்டுக் கொடுக்கமாட்டேன். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாகிவிடும்.’’ என்று பதிலளித்தார்.

1.30 PM : மக்களின் புனித போராட்டம் ரத்தக்கறையுடன் முடிந்துள்ளது. போராட்டக்காரர்களுடன் விஷக்கிரிமிகள் சமூகவிரோதிகள் கலந்துவிட்டனர். போராட்டக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். சமூகவிரோதிகளை விஷக்கிரிமிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டூம். மக்கள் சக்தி எத்தகையது என்பதை தூத்துக்குடி சம்பவம் உணர்த்திவிட்டது. இதன் பின்னரும் ஆலை நிர்வாகம், மீண்டும் ஆலையை இயக்க வேண்டும் என நினைக்கக் கூடாது. நீதி மன்றத்துக்கும் போகக் கூடாது. போலீசார் மீது கை வைத்தவர்களை சும்மாவிடக் கூடாது. எல்லா பிரச்னைக்கும் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என கேட்பது சரி இல்லை. இது போன்று போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு இருந்தால், இங்கே தொழில் நடத்த யாரும் வர மாட்டார்கள் என நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

12.30 PM : துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரை சந்திக்க ரஜினிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் கொடுத்தார், ரஜினிகாந்த்.

11.55 AM: தூத்துக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் 48 பேரையும் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதி வழங்கினார். மருத்துவமனையில் இருந்து கிளம்பினார், ரஜினி.

11.25 AM : தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றடைந்தார், ரஜினிகாந்த். செய்தியாளர்கள் உள்பட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

11.15 AM : நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் காயம் அடைந்தவார்களை சந்திக்க திறந்த காரில் சென்று கொண்டு இருக்கிறார். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10.50 AM : நடிகர் ரஜினியை வரவேற்க தூத்துக்குடி விமான நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு வந்து வரவேற்றனர். அங்கிருந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றார்.

9.14 AM: நடிகர் ரஜினியை தூத்துக்குடிக்கு வழியனுப்பி வைக்க ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்றும் ரசிகர்கள் சென்னை விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

8.36 AM : தூத்துக்குடிக்குப் புறப்படுவதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த், போயல் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறவே இன்று தூத்துக்குடி செல்கிறார். அவர்களுக்கு ஆறுதல் கூறினால் எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கும், அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்று கூறினார்.

காலை புறப்படும் ரஜினிகாந்த், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூற உள்ளார். இவரின் வருகையையொட்டி சென்னை விமான நிலையம் மற்றும் தூத்துக்குடியில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிர ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close