“முதலில் என்னை மன்னியுங்கள் முதல்வரே...” - எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகை விந்தியா கடிதம்

‘முதலில் என்னை மன்னியுங்கள் முதல்வரே...’ என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார் நடிகை விந்தியா.

‘முதலில் என்னை மன்னியுங்கள் முதல்வரே…’ என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார் நடிகை விந்தியா.

கடந்த தேர்தல்களில் அ.தி.மு.க.வின் பிரச்சார பீரங்கியாக தமிழகம் முழுவதும் வலம் வந்தவர் நடிகை விந்தியா. அவரின் பிரச்சாரத்தைப் பார்த்து வியந்த ஜெயலலிதா, போயஸ் கார்டனுக்கு அழைத்துப் பாராட்டினார். ஜெயலலிதா இறந்து ஓராண்டாகியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் விந்தியா.

அந்தக் கடிதத்தில், “முதலில் என்னை மன்னியுங்கள் முதல்வரே என்று கேட்கத் துடிக்கும் நேர்மையான தொண்டர்களில் நானும் ஒருத்தி. ‘எடப்பாடியாருக்கு இத்தனை பெரிய இடமா?’ என்று ஏளனப்பார்வை பார்த்தவர்களில் நானும் ஒருத்தி. அம்மாவைத் தவிர வேறொன்றும் அறியாத விசுவாசிகளில் நானும் ஒருத்தி. கூவத்தூர் கூத்துகளால் மனம் நொந்த மக்களில் நானும் ஒருத்தி.

இப்படி எத்தனையோ எதிர்மறை கருத்துகளால் மனம் வெறுத்தவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தாலும், இன்று என் மனம் எனை அறியாமல் உங்களைப் பாராட்டி எழுதச் சொல்கிறது. அம்மாவின் பிள்ளைகள் இனி அநாதைப் பிள்ளைகள் என எதிரிகள் ஏளனம் செய்யும்போது, தாயை இழந்து தவிக்கும் எங்களுக்கு தமையனாய் வந்தாய், அம்மாவின் ஆட்சி காத்து தைரியம் தந்தாய்…

நீங்கள் ஏறிவந்த படிக்கட்டுகளோ… தாண்டிவந்த, தகர்த்துவந்த தடைக்கற்களோ, வழிகளோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ‘நாளைக்கு கலைத்து விடுவோம்’ என்று வேளைக்கு அறிக்கைவிடும் கழக எதிரிகளிடம் இருந்து இயக்கத்தையும், இரட்டை இலையையும் கட்டிக்காத்த பெருமை உங்களுக்கு உண்டு.

தலையில் நீங்கள் கிரீடம் சுமந்து தலைவனாய் உருப்பெற்று ஒரு வருடம் உருண்டோடி விட்டது. சற்று உற்றுப் பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும் இது சுகவாசமா இல்லை வனவாசமா என்று… செயற்கைப் போராட்டங்கள், இயற்கை இடர்ப்பாடுகள், விஷத் துரோகக் கூட்டங்கள், விலைபோன நண்பர்கள் என மாறி மாறி அடித்தாலும், அசராமல் அம்மாவின் அரசாற்றினீர்கள்.

தலைவர்கள் இடையே தலைவனாய் இருப்பது சாதாரண செயல் அல்ல. வலிகளைத் தவிர்க்க முடியாவிட்டாலும், வேதனைகளை வெளிக்காட்டாமல் நீங்கள் நடத்திய இந்த ஒரு வருட ஆட்சி, உங்கள் திறமைக்கு சாட்சி.

வாழ்த்துகின்றேன் முதல்வரே! அம்மாவின் ஆட்சி தொடரட்டும். ஏழை மக்களின் முகம் மலரட்டும். இரட்டை இலை இருக்கும் பக்கம் இயக்கம் இருக்கும். இயக்கம் இருக்கும் பக்கம் அ.தி.மு.க. தொண்டர்களின் இதயம் இருக்கும். உங்கள் வெற்றிப் பயணம் தொடர விரும்பும் அன்புத் தொண்டர்களில் நானும் ஒருத்தி” என கூறப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close