Advertisment

உதயநிதி பதவியேற்பு: 400 பேருக்கு அழைப்பு; இ.பி.எஸ் பங்கேற்பாரா?

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழா; எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 400 பேருக்கு அழைப்பு

author-image
WebDesk
New Update
உதயநிதி பதவியேற்பு: 400 பேருக்கு அழைப்பு; இ.பி.எஸ் பங்கேற்பாரா?

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

கடந்த ஆண்டு (2021) நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்தத் தேர்தலில் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அப்போதே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால், அப்போது அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையில், கட்சியில் மீண்டும் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். மேலும், உதயநிதி கடந்த சில ஆண்டுகளாகவே, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று கட்சி வளர்ச்சிப்பணிகளில் தீவிரமாக பணியாற்றி வந்தார்.

இதையும் படியுங்கள்: உதயநிதிக்கு அமைச்சர் பதவி; இதுவே டூ லேட்: அமைச்சர் பொன்முடி கருத்து

இந்த நிலையில், கடந்த மாதம் (நவம்பர்) 27-ம் தேதி உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவருக்கு அமைச்சர்களும், கட்சியின் முன்னணி தலைவர்களும், மாவட்ட நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த விழாக்களில் பேசிய சில அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுதவிர பல மாவட்டங்களில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கட்சித் தலைமைக்கு அனுப்பப்பட்டது.

இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்ற உறுதியான தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக நியமிக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில், நேற்று திருப்பூரில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் ஸ்டாலின், தனது மகன் உதயநிதிக்கு அமைச்சர் பதவிக்கான பட்டாபிஷேகத்தை விரைவில் நடத்தவுள்ளார். தன்னிடம் கணக்கிலுள்ள பணத்தை மாற்றவே உதயநிதி திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என பேசியிருந்தார்.

இதேபோல், சேலத்தில் இன்று பேசிய எடப்பாடி பழனிச்சாமி, குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். திமுக என்பது கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது. உதயநிதிக்கு நாளை முடிசூட்டு விழா நடக்கிறது. கருணாநிதி, ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதியை தலைமைக்கு கொண்டு வர முன்னோட்டம் பார்க்கிறார்கள். அவர் அமைச்சர் ஆனால் தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடப்போகிறதா?. வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என கூறியுள்ளார். இதனால் அவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் எடப்பாடி கலந்துக் கொள்ள வாய்ப்பு குறைவு என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Dmk Udhayanidhi Stalin Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment