அரசை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது... ஓ.பி.எஸ் அணியில் இருந்து எஸ்கேப் ஆன ஆறுகுட்டி!

அணிகள் ஒன்றிணைவது தான் சரியானதாக இருக்கும் என்றும் கருதுகின்றனர். அரசை எதிர்த்து தொகுதி மக்களுக்கு எதையும் செய்ய முடியாது என்று கூறினார்.

ஓ.பி.எஸ்-யை புறக்கணிப்பதாக கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், தமிழக அரசியலில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. அது இன்னமும் முடிந்தபாடில்லை. அதிமுக இரண்டாக பிளவடைந்த நிலையில், அதில் மேலும் ஒரு பிளவு ஏற்பட்டது. தற்போது, ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், மற்றும் டிடிவி தினகரன் என மூன்று அணிகளாக செயல்பட்டு வருகிறது.

சசிகலாவிற்கு எதிராக முதலில் போர்க்கொடி உயர்த்தி வந்த பன்னீர் செல்வத்திற்கு, முதல் ஆளாக வந்து ஆதரவு தெரிவித்தவர் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி. இந்த நிலையில், அவர் தற்போது ஓ.பி.எஸ் அணி மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் ஆறுக்குட்டி கூறும்போது: இரு அணிகள் இணைவது தொடர்பான கேள்விக்கு சரியான பதில் இல்லை. பிளவுபட்ட இரு அணிகளையும் இணைக்க வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ் அணியினருக்கு உடன்பாடு இல்லை. மேலும், என்னை ஓ.பி.எஸ் அணியினர் புறக்கணிக்கும் வகையில் செயல்படுவதால், நான் அவர்களை புறக்கணிக்கிறேன்.

நான் எனது தொகுதி மக்களுக்காக சேவையாற்ற விரும்புகிறேன். அதனால், எதை இழந்தாலும் இழப்பனே தவிற என் தொகுதி மக்களை இழக்க மாட்டேன். அதிமுக-வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினால் தீர்வு கண்டுவிடலாம்.

இரு அணிகளையும் இணைக்க வேண்டும் என இரு அணியைச் சேர்ந்தவர்களும் கூறிக்கொண்டே தான் இருக்கின்றார்களே தவிற, அது தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இரு அணிகளும் இணையாவிட்டால், கட்சி காணாமல் போய்விடும் என்பதை நாங்கள் தெரிவித்து வருகிறோம். ஆனால், இதனை கேட்பதற்கு ஆள் இல்லை.

தொகுதி மக்கள் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். அணிகள் ஒன்றிணைவது தான் சரியானதாக இருக்கும் என்றும் கருதுகின்றனர். அரசைஎதிர்த்து தொகுதி மக்களுக்கு எதையும் செய்ய முடியாது என்று கூறினார்.

×Close
×Close