பேச்சுவார்த்தையில் சுமூகம்; ஓரிரு நாட்களில் நல்ல முடிவு : ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை சுமூகமாக செல்வதாகவும், ஓரிரு நாட்களில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

முதல் முறையாக அதிமுக அணிகள் இணைப்பு குறித்து சாதகமான பதிலை ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். பேச்சுவார்த்தை சுமூகமாக செல்வதாகவும், ஓரிரு நாட்களில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

அதிமுக.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோர் தலைமையில் 3 பிரதான அணிகள் மல்லுக்கட்டுகின்றன. ஜெ.தீபா தலைமையிலான இன்னொரு அணியும், ‘தொண்டர்களின் செல்வாக்கு தங்களுக்கு இருப்பதாக’ கூறி வருகிறது.

இந்த அணிகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், ஓ.பி.எஸ். அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆகஸ்ட் 17, ஆகஸ்ட் 18-ம் தேதிகளில் மும்முரமாக நடந்தன. ஆகஸ்ட் 18-ம் தேதி இரவே இதில் ஒரு முடிவு கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்த சூழலில், அது நடைபெறாததில் இணைப்பு நடக்குமா? என்கிற கேள்வி விஸ்வரூபம் எடுத்தது.

இன்று (ஆகஸ்ட் 19) காலையில் ஓ.பி.எஸ். அணியின் சீனியரான கே.பி.முனுசாமி அளித்த பேட்டியில், ‘எங்கள் கோரிக்கையின் மூலக்கருவே சசிகலா குடும்பத்தை நீக்குவதுதான். அது முழுமையாக நிறைவேறாத சூழலில் பேசி பிரயோஜனமில்லை. தொண்டர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் பாதுகாப்புக்காகவே நான் அழுத்தம் கொடுத்து வருகிறேன். எனினும் ஓ.பி.எஸ். எடுக்கும் இறுதி முடிவை அனைவரும் ஏற்போம்’ என கூறினார்.

இன்றும் தனது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மாஃபாய் பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்டோருடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் பிற்பகல் 1.15 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ‘பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. ஓரிரு நாட்களில் நல்ல முடிவு அறிவிக்கப்படும். அதிமுக.வில் எந்தப் பிரச்னையும் இல்லை. எம்.ஜி.ஆரும், அம்மாவும் உருவாக்கி வளர்த்த அதிமுக.வை காப்பாற்றுகிற நோக்கத்தில், அவர்களின் அரசியல் பாதையை வெற்றிகரமாக தொண்டர்களின் எடுத்துச் செல்கிற பணியை செய்வோம்.

ஏற்கனவே நான் கூறியபடி, தொண்டர்கள் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப எங்கள் நடவடிக்கை இருக்கும்.’ என்றார் ஓ.பி.எஸ்.

முதல்முறையாக அணிகள் இணைப்பு குறித்து மிகவும் பாசிட்டிவான பதிலை ஓ.பி.எஸ். தெரிவித்திருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்னென்ன நிபந்தனைகள் அடிப்படையில் இணைவது? என்பது இன்னும் இறுதி செய்யப்பட்டதாக தெரியவில்லை. அதற்காகவே இன்னும் ஓரிரு தின அவகாசத்தை ஓ.பி.எஸ். குறிப்பிடுவதாக தெரிகிறது. அந்த நிபந்தனைகள் பூர்த்தி ஆகும்போது, அணிகளின் இணைப்பும் பூர்த்தியாகும் என தெரிகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close