Advertisment

டிக்கெட் விலையை ஏற்றி மக்கள் வேதனையை ரசிக்கும் 'சேடிஸ்ட்' அரசு - ஸ்டாலின் கடும் தாக்கு!

சென்னையிலிருந்து திருச்சிக்குச் செல்ல 235 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 372 ரூபாயகவும், குளிர் சாதன பேருந்துகளில் 496 ரூபாயாகவும் உயர்ந்து விட்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டிக்கெட் விலையை ஏற்றி மக்கள் வேதனையை ரசிக்கும் 'சேடிஸ்ட்' அரசு - ஸ்டாலின் கடும் தாக்கு!

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏழை – எளிய, நடுத்தர மக்களை சோதனைக்கும், வேதனைக்கும் தொடர்ந்து ஆளாக்கி, அடிக்குமேல் அடித்துக் கசக்கிக் கந்தலாக்கி வரும் அதிமுக அரசு அடுத்த தாக்குதலாக, திடீரென்று 3600 கோடி ரூபாய்க்கு மேல் பேருந்துக் கட்டணங்களை மிகக் கடுமையாக உயர்த்தியிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. டீசல் விலை உயர்வு மிக அதிகமாக இருந்த 2006 முதல் 2011 வரையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும், முதியவர்களும், மாணவர்களும் பயன்படுத்தும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல், ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால், அதிமுக ஆட்சி 2011-ல் பொறுப்பேற்றவுடன் 18.11.2011 அன்று பேருந்து கட்டணத்தை 50 சதவீதம் அளவிற்கு உயர்த்தி, மக்களை வாட்டி வதைத்தது என்பதையும் நாம் மறந்து விட முடியாது.

Advertisment

தி.மு.க. ஆட்சியில் மாநகர பேருந்துகளில் 2 ரூபாயாக இருந்த குறைந்தபட்சக் கட்டணம் 2011 அதிமுக ஆட்சியில் 3 ரூபாயாக உயர்த்தப்பட்டு, இப்போது 5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. அதேபோல், மாநகர பேருந்துகளில் 12 ரூபாயாக இருந்த அதிகபட்சக் கட்டணம் இன்றைக்கு 23 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சாமான்ய மக்கள், சில்லரை வியாபாரிகள், கோயம்பேடு உள்ளிட்ட வணிக வளாகங்களுக்குச் செல்வோர் பயன்படுத்தும் பேருந்து கட்டணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறது அதிமுக அரசு.

மாநகரில் ஓடும் அனைத்துவகை பேருந்துகளின் கட்டண உயர்வுகளையும் பார்த்தால், தற்போது உள்ள கட்டணத்திற்கும் அதிகரிக்கப்பட்டுள்ள கட்டணத்திற்கும் பத்து ரூபாய் முதல் 60 ரூபாய் வரை கூடுதலாகி இருக்கிறது. குறிப்பாக, ஐ.டி. ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்தும் ஏ.சி. பேருந்துகளின் கட்டணம் 90 ரூபாயிருந்து 140 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாநில அளவில் இயக்கப்படும் பேருந்துகளின் கட்டண உயர்வும் பயணிகளின் முதுகெலும்பை முற்றிலும் முறித்துப்போடும் விதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பேருந்துகளின் கட்டணம் குறைந்தபட்சமாக 5 ரூபாய் என்ற அளவில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதேபோல், விரைவுப் பேருந்து கட்டணம், அதி சொகுசு பேருந்து, இடைநில்லா பேருந்து, புறவழிச்சாலை இயக்கப் பேருந்துகள் எல்லாவற்றிலும் அதிமுக ஆட்சியில் நடக்கும் டெண்டர் ஊழல்களுக்கு பணம் சேகரிக்கும் உள்நோக்குடன், சகட்டு மேனிக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து திருச்சிக்குச் செல்ல 235 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 372 ரூபாயகவும், குளிர் சாதன பேருந்துகளில் 496 ரூபாயாகவும் உயர்ந்து விட்டது. அதே போல் மதுரைக்குச் செல்லும் கட்டணம் 325 ரூபாயிலிருந்து 515 ரூபாயாகவும், திருநெல்வேலிக்கு 695 ரூபாயாகவும் உயர்ந்து விட்டது. நாகர்கோயிலுக்குச் செல்லும் கட்டணம் 778 ரூபாயாகவும், கோவைக்கு 571 ரூபாயாகவும், தஞ்சாவூருக்கு 439 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இந்த அதிரடி கட்டண உயர்வால் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் கட்டணம் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் குறைந்த பட்சம் 372 ஆகவும், அதிகபட்சமாக 778 ரூபாயும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குளிர் சாதனப் பேருந்துகளிலோ குறைந்த கட்டணம் 496 ரூபாயாகவும் அதிக பட்ச கட்டணம் 1038 ரூபாயாகவும் உயர்த்தி, அரசு பேருந்துகளின் கட்டணங்கள் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களாக மாற்றப்பட்டுள்ள கொடுமை நடைபெற்றுள்ளது.

கழக ஆட்சியில் டீசல் விலை உயர்ந்த போது கூட ஐந்து வருடம் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் 2015 முதல் சர்வதேச சந்தையில் டீசல் விலை குறைந்து வருகின்ற நிலையில், இப்படியொரு விஷம் போன்ற கட்டண உயர்வை அறிவித்திருப்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. தினமும் விலையேறும் பங்கு சந்தை போல் மத்திய பா.ஜ.க. அரசு அறிமுகம் செய்த பெட்ரோல்-டீசல் விலை ஏற்றத்தை எதிர்க்க தைரியமில்லாத - பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் கொண்டுவரக் கோரிக்கை வைக்கக் கொஞ்சமும் திராணியில்லாத அதிமுக அரசும், அதன் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமியும் மக்களின் தலையில் தாராளமாக பேருந்து கட்டணப் பேரிடியை இறக்கியிருப்பது இந்த ஆட்சி மக்களுக்காக நடப்பதல்ல, கமிஷனுக்காக மட்டுமே நடக்கும் ஆட்சி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து அறிவித்துக் கொண்டிருக்கிறது.

பேருந்து கட்டண வருமானம் தவிர, பேருந்துகளில் விளம்பரம், போக்குவரத்துக் கழகங்களின் மோட்டல்கள், போக்குவரத்துக் கழகங்கள் நடத்தும் கொரியர் சர்வீஸ் போன்றவற்றின் மூலமும் போக்குவரத்துக் கழகங்களுக்கு இதர வருமானம் வருகிறது. இந்த இதர வருமானங்களைப் பெருக்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை. கடந்த ஐந்து வருடங்களில் அறிவித்த 12 ஆயிரம் பேருந்துகளில் 7500 பேருந்துகள் இன்னும் வாங்கப்படவே இல்லை. பழைய பேருந்துகளும் பராமரிக்கப்படவில்லை. மாறாக, ஒரு நாளைக்கு பத்து கோடி ரூபாய் பேருந்து கட்டண உயர்வை மக்கள் தலை மீது ஏற்றி வைத்து அவர்கள் படும் வேதனையை கைகொட்டி ரசிக்கும் சேடிஸ்ட் மனப்பான்மை கொண்ட அரசாக அதிமுக அரசு இருக்கிறது.

போக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்த பணத்தையும் எடுத்து செலவு செய்து விட்டு போக்குவரத்துக் கழகங்களை நஷ்டத்தில் மூழ்கடித்து விட்ட அதிமுக அரசு தன் நிர்வாகச் சீர்கேட்டை மறைக்க இப்படி மக்களின் தலையில் கட்டண உயர்வை ஏற்றி வைத்துள்ளது. இது ஆம்னி பேருந்துகளுக்கும் தனியார் பேருந்துகளுக்கும் உதவும் முயற்சியா என்ற கேள்வியும் எழுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நூறு சதவீத சம்பள உயர்வு, அரசு துறைகள் அனைத்திலும் ஊழலோ ஊழல், விழாக் கொண்டாட்டங்களுக்கு ஊதாரிச் செலவுகள், செயல்படாத அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாயில் பப்ளிஸிட்டி மோசடி என்று அரசு கஜானாவை காலி செய்து கொண்டிருக்கும் அதிமுக அரசு, சாமான்ய மக்களின் போக்குவரத்து சேவையில் கை வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டினால் நிலை குலைந்து விட்ட போக்குவரத்துக் கழகங்களை மீட்கிறேன் என்ற போர்வையில் வருடத்திற்கு 3600 கோடி ரூபாய் பேருந்து கட்டண உயர்வை இரவோடு இரவாக அறிவித்து, வாங்கும் சக்தி குறைந்து தாங்கும் சக்தியற்ற மக்கள்மீது பெரும்சுமையை ஏற்றியிருக்கும் அதிமுக அரசுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சாமான்ய மக்களிடம் இரக்கமின்றி விளையாடிய எந்த அரசும் விபரீதத்தைத்தான் சந்தித்து இருக்கிறது என்ற சரித்திரப் படிப்பினையை அதிமுக அரசு உணர்ந்து, அதனை எச்சரிக்கையாகக் கொண்டு, உடனடியாக பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment