அதிமுக ‘ஐ.டி. விங்’ ஹரி பிரபாகரன் நீக்கம் : செய்தியாளர்களை விமர்சித்ததால் நடவடிக்கை

ஹரி பிரபாகரன், இன்று தன்னை நீக்கி கட்சி வெளியிட்ட அறிவிப்பையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ஹரி பிரபாகரன்  அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆக்டிவான நிர்வாகிகளில் ஒருவர், ஹரி பிரபாகரன்! இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் தனித்தனியாக இயங்கியபோது ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தார். அதிமுக அணிகள் இணைப்புக்கு பிறகு காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக செயல்பட்டு வந்தார்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியில் படு தீவிரமான செயல்பாட்டாளர் இவர்தான்! அதிமுக மீது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் முன்வைக்கிற விமர்சனங்களுக்கு கடுமையாக எதிர்வினையாற்றி வந்தார் இவர். குறிப்பாக கமல்ஹாசன் ரசிகர்களுக்கும், இவருக்கும் இடையே ட்விட்டரில் கடும் மோதல்கள் அரங்கேறியது உண்டு.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி அவரையும் வெகுவாக புகழ்ந்து பதிவுகளை இட்டார் ஹரி பிரபாகரன். அதிமுக.வுக்காக வரிந்து கட்டி சண்டை போடுவதால், ட்விட்டரில் இவருக்கு எதிரிகளும் ஏராளம்! இந்தச் சூழலில் இன்று (மே 28) ஹரி பிரபாகரன் வெளியிட்ட ஒரு ட்வீட், அதிமுக.வில் இருந்தே அவரை நீக்க காரணமாகிவிட்டது.

துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மீடியாவை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை. நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ மருத்துவமனை சென்றபோது அவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பியதால், இன்று துணை முதல்வர் விசிட்டில் மீடியா அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறிய ஹரி பிரபாகரன், ‘துணை முதல்வர் விசிட்டின்போது மருத்துவமனைக்குள் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை- பிஸ்கட்களுக்காக குரைக்கும் தெரு நாய்களை வாசலில்தான் கட்டிப் போட்டிருக்க வேண்டும். அவற்றை உள்ளே விட முடியாது’ என ஆங்கிலத்தில் பதிவிட்டார் ஹரி பிரபாகரன்.

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பில் உள்ள ஒருவரின் இந்த விமர்சனம், பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து செய்தியாளர்கள் தனிப்பட்ட முறையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அதிமுக அறிவித்திருக்கிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘கட்சியின் கொள்கைக்கும் குறிக்கோளுக்கும் இடையூறு ஏற்படும் விதமாக ஹரி பிரபாகரன் செயல்பட்டதாகவும், அவருடன் கட்சியினர் தொடர்பு கொள்ளக்கூடாது’ எனவும் கேட்டுக்கொண்டனர்.

ஹரி பிரபாகரன் இன்று காலையில் வெளியிட்ட சர்ச்சை ட்வீட்டை தனது பக்கத்தில் இருந்து மதியம் நீக்கிவிட்டார். ‘எனது பதிவுகள் எனது தனிப்பட்ட கருத்துதான். கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக கருத்து கூற எனக்கு அதிகாரம் கிடையாது. அதுவும் எனது கருத்து சிலரை வேதனைப்படுத்தியதாக கூறியவுடன் அதை நீக்கிவிட்டேன். அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என பின்னர் இன்னொரு ட்வீட்டை போட்டார் ஹரி பிரபாகரன். ஆனாலும் கட்சித் தலைமை அதை ஏற்காமல் நடவடிக்கை எடுத்துவிட்டது.

வழக்கமாக கட்சித் தலைமையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பெருமைப்படும் ஹரி பிரபாகரன், இன்று தன்னை நீக்கி கட்சி வெளியிட்ட அறிவிப்பையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். ஆனாலும் எஸ்.வி.சேகர் பாணியில் அவரது விமர்சனத்திற்கு உடனடி நடவடிக்கை எடுத்து சர்ச்சையின் பிடியில் இருந்து தப்பிக் கொண்டது அதிமுக!

ஹரி பிரபாகரன் தனது ட்விட்டர் பதிவுகள் சிலவற்றில் ரஜினிகாந்த் மீதான பாசத்தை வெளிப்படுத்தி வந்திருக்கிறார். எனவே அவர் ரஜினி கட்சி தொடங்கினால் அதில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close