இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : சட்டமன்றத்தில் டிடிவி-யை பார்க்க, பேச, சிரிக்க தடை

டிடிவி தினகரனை பார்க்கவோ, பேசவோ, சிரிக்கவோ வேண்டாம். தமிழக சட்டமன்றம் கூடவிருக்கும் நிலையில், ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்ட அஜென்டா இதுதான்!

டிடிவி தினகரனை பார்க்கவோ, பேசவோ, சிரிக்கவோ வேண்டாம். தமிழக சட்டமன்றம் கூடவிருக்கும் நிலையில், ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்ட அஜென்டா இதுதான்!

டி.டி.வி.தினகரன், ஆர்.கே.நகரில் சுயேட்சையாக ஜெயித்துவிட முடியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க வில்லை. இடைத்தேர்தல் என்றாலே, ஆளும்கட்சியின் வியூகங்களுக்கு யாரும் இணையாக நிற்க முடியாது என்பதுதான் கடந்த 13 ஆண்டுகால வரலாறு.

டி.டி.வி.தினகரன் அந்த வரலாறை மாற்றியதுடன், அதிமுக.வை கைப்பற்றவும் மும்முரமாக காய் நகர்த்தி வருகிறார். ‘சசிகலா குடும்பத்தினரால் இனி கட்சி நடத்த முடியாது. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் சசிகலா மீது கோபம் நிலவுகிறது’ என நம்பியே அதிமுக மூத்த நிர்வாகிகளும், மொத்த எம்.எல்.ஏ.க்களும் இபிஎஸ் பின்னால் அணி திரண்டனர். ஆனால் இபிஎஸ்.ஸும் ஓபிஎஸ்.ஸும் ஓவராக டெல்லிக்கு ஒத்துப் போனதில் இப்போது எம்.எல்.ஏ.க்களுக்கும் நிர்வாகிகளுக்குமே அதிர்ச்சி!

டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகரில் சசிகலா எதிர்ப்பலையை தாண்டி ஜெயித்தது, மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளை மீறி அரசியல் செய்வது ஆகியன இப்போது அதிமுக நிர்வாகிகள் பலரை டிடிவி தினகரன் பக்கம் பார்வையை திருப்பியிருக்கிறது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலரும்கூட, ‘அம்மா ஆட்சி முழுமையாக தொடரவேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக இபிஎஸ் பக்கம் நிற்கிறோம். ஆனால் கட்சியை டிடிவி தினகரனால்தான் நடத்த முடியும். ஒபிஎஸ்-இபிஎஸ் இடையிலான பனிப்போர் காரணமாக அவர்களால் எந்த தைரியமான முடிவையும் எடுக்க முடியாது’ என பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

டி.டி.வி.தினகரன் இந்த நிலையில்தான் சட்டமன்றத்திற்குள்ளும் நுழைகிறார். ‘தனியாக சட்டமன்றம் போகிறீர்களே?’ என டிடிவி தினகரனிடம் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நான் தனியாக செல்லவில்லை. ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் வருகிறார்கள்’ என்றார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்களில் பலரும் டிடிவி மீது அதீத மரியாதை வைத்திருப்பவர்கள். எனவே டிடிவி-யை எதிரில் பார்த்தால் அவர்களால் சிரிக்காமலோ, பேசாமலோ இருக்க முடியாது. ஆனால் அதை வைத்தே ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் டிடிவி தினகரனுடன் இணக்கமாக இருப்பதாக மீடியாவில் செய்தி வரும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே டிடிவி தினகரனை பார்ப்பதை, அவரைப் பார்த்து சிரிப்பதை, அவருடன் பேசுவதை தவிர்த்துவிடும்படி அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இன்று (ஜனவரி 3) சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தின் பிரதான அஜன்டா இதுதான்!

டிடிவி தினகரன் – அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இடையே என்னவிதமான கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கப் போகிறது? என்பது ஜனவரி 8-ல் தொடங்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் தெரிந்துவிடும்.

 

×Close
×Close