Advertisment

இது இபிஎஸ்-க்கு; அது ஓபிஎஸ்-க்கு; அந்த இன்னொரு பதவி யாருக்கண்ணே? அதிமுக கலாட்டா

இந்த மாத இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா ஆகிய பதவிகளை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் அதிமுக தலைமை உள்ளது

author-image
WebDesk
New Update
இது இபிஎஸ்-க்கு; அது ஓபிஎஸ்-க்கு; அந்த இன்னொரு பதவி யாருக்கண்ணே? அதிமுக கலாட்டா

சட்டமன்றத் தேர்தலில் பலத்துடன் திமுக வை எதிர்கொள்ள எவ்வித உள்கட்சி சலசலப்புகளும் இல்லாமல் அதிமுக தலைமை காய் நகர்த்தியது. இருப்பினும், முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பத்தால் சிறு சலசலப்புகள் உண்டாக, இறுதியாக சலசலப்புகளுக்கு காரணமான பன்னீர்செல்வமே முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என கூறும் அளவுக்கு கட்சியில் தனித்து விடப்பட்டார். தேர்தலுக்கு பிறகாக, ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக வை கட்டுக்குள் கொண்டு வர, எடப்பாடியும் பன்னீரும் முட்டி மோதிக் கொண்டனர். அதன் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுப்பது தொடர்பான பேச்சுகள் அடிபட, இருவருமே நேரடியாக மோதிக் கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பான கூட்டத்தில் நடந்த சலசலப்புகளில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மனோஜ் பாண்டியன் மட்டுமே வெளிப்படையாக குரல் கொடுத்தார். இறுதியாக, கட்சிக்குள் தனக்கான ஆதரவு நிலையை உணர்ந்த பன்னீர்செல்வம் கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறினார்.

Advertisment

அதன் பிறகு, எதிர்க்கட்சித் தலைவரானார் எடப்பாடி பழனிச்சாமி. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை பன்னீர்செல்வத்துக்கு ரிசர்வ் செய்து வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இருப்பினும், அப்பதவிக்கு அதிமுக சீனியர் நிர்வாகிகள் சிலர் தங்களுக்கு கேட்க, அவர்களை எல்லாம் அடக்கி, அது பன்னீர் அண்ணனுக்கு தான் என, எடப்பாடி சொல்லியுள்ளதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டன.

முதல்வர் வேட்பாளராக தவிர்க்கப்பட்டது, எதிர்க்கட்சித் தலைவராக முடியாதது, கட்சியில் ஒற்றை தலைமையை தக்க வைக்க இயலாதது என பன்னீர்செல்வம் பல விதமான டென்ஷன்களில் உள்ளார். இப்படியே நிலை நீடித்தால், தற்போதுள்ள நம்பர் 2 பொஷிசனும் போய், நூறில் ஒருவராக பின் தள்ளப்பட்டுவிடுவோமோ என்ற ஐயம் பன்னீரை தொற்றிக் கொண்டுள்ளது. இந்த நிலையில், பன்னீரின் அடுத்த ஆயுதமாக ‘கொறடா பதவி’ இருக்கும் என அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில், கட்சி எம்.எல்.ஏக்களை கட்டுப்படுத்தும் முக்கிய பதவியாக கொறடா பதவி உள்ளது.

கட்சியின் கொறடா உத்தரவை மீறி, கட்சி எம்.எல்.ஏக்கள் நடந்தால், அவர்களின் பதவியை விட்டே நீக்க பரிந்துரைக்கும் அதிகாரமும் கொறடாவுக்கு உள்ளது. சசிகலா அதிமுக வில் பிரவேசிக்க காத்திருக்கும் இந்த சூழலில், அவரின் வருகையை பன்னீர் எதிர்நோக்கி காத்திருப்பதாகவே சொல்லப்படுகிறது. இதனால், எடப்பாடி உள்பட அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் கட்டுக்குள் வைக்க, பன்னீர்செல்வம் கொறடா பதவிக்கு முனைப்பு காட்டி வருவதாக அதிமுக நிர்வாகிகள் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

இருப்பினும், சசிகலா வருகையை கருத்தில் கொண்டு முழுமையாக பன்னீர்செல்வத்தை எதிர்க்க இயலாத சூழலில் சிக்கி இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தி எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவியை ஏற்க வைக்கும் முயற்சிகளில் எடப்பாடி இறங்கி உள்ளார். பன்னீர்செல்வமும் எந்த பதவியை ஏற்பது என்ற குழப்பத்திலேயே உள்ளாராம். இந்த சூழலில், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பன்னீர்செல்வம் பதவியேற்றால், அதிமுக கொறடா யார் என்ற பேச்சுகளும் அடிப்படத் தொடங்கியுள்ளன.

கொறடா பதவிக்கு கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரின் பெயர்கள் பழனிச்சாமி தரப்பிலும், சீரியர் என்ற முறையிலும் பரிசீலனையில் உள்ளது. இதே வேளையில், பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து மனோஜ் பாண்டியனை அரசு கொறடாவாக பதவியேற்க செய்து, அப்பதவியின் அதிகாரங்களை தன் கீழாக வைத்திருக்கவும் பன்னீர்செல்வம் கடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர் தேர்வில், மனோன் பாண்டியன் வெளிப்படையாகவே பன்னீர்செல்வத்தை ஆதரித்ததன் காரணமாக மற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் அவரை ஆதரித்து கொறடாவாக தேர்வு செய்வது என்பது கடினம் தான் என, அதிமுக நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கின்றனர். இந்த மாத இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா ஆகிய பதவிகளை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் அதிமுக தலைமை உள்ளது. அடுத்தடுத்து திருப்பங்கள் அதிமுக வில் காத்திருக்கிறது என்பதை நிர்வாகிகளின் கருத்துகளில் இருந்து தெரிய வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Eps Admk Sasikala Vs Aiadmk Kp Munusamy Manoj Pandian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment