ADMK presidium president submits general body decision on Erode By-poll candidate, தென்னரசுவை தவிர வேறு யார் பெயரும் முன்மொழியப் படவில்லை; சி.வி.சண்முகம் | Indian Express Tamil

தென்னரசுவை தவிர வேறு யார் பெயரும் முன்மொழியப் படவில்லை; சி.வி.சண்முகம்

அ.தி.மு.க அதிகாரப்பூர்வ வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம் – அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்

தென்னரசுவை தவிர வேறு யார் பெயரும் முன்மொழியப் படவில்லை; சி.வி.சண்முகம்
தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை சமர்ப்பித்தப்பின் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்திப்போது…

பொதுக்குழு உறுப்பினர்கள் முன்மொழிந்ததன் அடிப்படையிலே கே.எஸ்.தென்னரசு பெயர் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இடம் பெற்றிருந்தது என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம், அனுப்பி, அவர்களின் முடிவுகளைப் பெற்றார்.

இதையும் படியுங்கள்: ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ்: இரட்டை இலையை ஆதரிப்போம் என கு.ப கிருஷ்ணன்

இதற்கிடையில், கடிதத்தில் இ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு பெயர் மட்டும் இடம்பெற்றிருப்பதற்கு ஓ.பி.எஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அவைத்தலைவர் நடுநிலை தவறிவிட்டதாகக் கூறி ஓ.பி.எஸ் தரப்பு பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.

இந்தநிலையில், பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்மகன் உசேன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு, பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கான ஆவணங்களை இன்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம் என தெரிவித்தார்.

அப்போது ஓ.பி.எஸ் தரப்பு குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டப்போது, அதற்கு முன்னாள் அமைச்சர் சி.வி .சண்முகம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்குழு சுற்றறிக்கை வாயிலாக கூட்டப்பட்டது. 2665 பொதுக்குழு உறுப்பினர்களில், இறப்பு, மாற்றுக்கட்சியில் இணைதல் காரணமாக 19 பேர் தவிர, மீதமுள்ள 2646 பேர்களுக்கு பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில் கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக ஏற்கலாம் அல்லது மறுக்கலாம் அல்லது நீங்கள் விரும்பிய ஒருவரை பரிந்துரை செய்யலாம் என விருப்பங்கள் வழங்கப்பட்டது. ஒருவர் பெயர் மட்டும் வழங்கவில்லை. கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக முன்மொழிவதாக பொதுக்குழு உறுப்பினர்களால் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலே அவைத்தலைவர் பொதுக்குழுவின் ஒப்புதலுக்கு வைத்திருக்கிறார். வேறு யாரும் யாருடைய பெயரையும் பரிந்துரை செய்யவில்லை. 2501 பொதுக்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக அறிவிக்க ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதில் மறுப்பு தெரிவித்து ஒரு வாக்கும் வரவில்லை. அதேநேரம் 145 வாக்குகள் பதிவாகவில்லை.

பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் ஆவண செய்யும் என எதிர்ப்பார்க்கிறோம் என சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Admk presidium president submits general body decision on erode by poll candidate