எந்தவித மதச் சடங்குமின்றி நடைபெறும் ‘ சுயமரியாதை’ திருமணம் புரியும் தம்பதியை அறிந்தவர்கள் என்ற முறையில் மட்டுமே வழக்குரைஞர்கள் அங்கீகாரம் வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கமான மதச் சடங்குகள் ஏதுமின்றி சுயமரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான சட்டத்தை 1968ம் ஆண்டு தமிழக அரசு இயற்றியது. மத்திய அரசு இயற்றிய இந்து திருமண திருத்தச் சட்டமும் அதற்கு அங்கீகாரம் வழங்குகிறது.
உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்டோரின் முன்னிலையில் எளிமையாகத் திருமணம் நடைபெறுவதை அச்சட்டம் ஊக்குவிக்கிறது. அதே வேளையில் , அத்தகைய திருமணங்கள் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில் இளவரசன் என்பவர் சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொண்டார். ஆனால், தனது மனைவியின் உறவினர்கள் அவரை வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்று சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இளவரசன் ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். வழக்குரைஞர் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் நடைபெற்றதையும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுபோன்ற சுயமரியாதைத் திருமணங்களை வழக்குரைஞர்களே நடத்தி அதன் பிறகு அதற்கான சான்றிதழை வழங்க முடியாது என உத்தரவிட்டது. இளவரசனின் மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் இதுபோன்று போலி திருமணச் சான்றிதழ் வழங்கும் வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து இளவரசன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், அரவிந்த் குமார் ஆகியோரைக் கொண்ட அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தனர். சுயமரியாதை திருமணங்களை வழக்குரைஞர்கள் அங்கீகரிக்கலாம் என்று உத்தரவிடனர்.
அதேநேரத்தில், நீதிமன்றத்தின் பிரதிநிதி என்று அல்லாமல் தம்பதியை அறிந்தவர் என்ற தனிப்பட்ட வகையில் மட்டுமே சுயமரியாதை திருமணத்தை வழக்குரைஞர் நடத்தி வைக்க முடியும் என்று நீதிபதிகள் கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”