அரசு பள்ளி கட்டுவதற்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியை

ஓய்வுபெற்ற ஆசிரியை பொன்மணி தேவி என்பவர், 4 கோடி ரூபாய் மதிப்பிலான தனது நிலத்தை அரசு பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தானமாக அளித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் 32 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியை பொன்மணி தேவி என்பவர், 4 கோடி ரூபாய் மதிப்பிலான தனது நிலத்தை அரசு பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தானமாக அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்மணி தேவி (வயது 85). இவர் ஈரோடு மாவட்டத்தில், கடந்த 1964-ஆம் ஆண்டு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியை துவங்கினார். 32 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிலிருந்த அவர், 1996-ஆம் ஆண்டு கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள மொடச்சூர் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் பின்தங்கிய குழந்தைகளின் நலனுக்காகவும், படிப்புக்காகவும் பல்வேறு உதவிகளை செய்துவந்தார் பொன்மணி தேவி. கடந்த 2006-ஆம் ஆண்டு, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்காக விடுதி கட்டுவதற்கு, தன்னுடைய 25 சென்ட் நிலத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு தானமாக வழங்கினார்.

அதேபோல், 2015-ஆம் ஆண்டு சித்தோடு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த ரூபாய் 2 லட்சத்தை நிதியாக வழங்கினார் பொன்மணி தேவி.

“நான் உயிருடன் இருக்கும் வரை இம்மாதிரியான நல்ல காரியங்களையே செய்ய வேண்டும்”, என கூறுகிறார் பொன்மணி தேவி.

×Close
×Close