அ.தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் எடப்பாடி பழனிசாமி தரப்பும் காரசாரமாக வாதங்களை முன்வைத்து வாதிட்டனர்.
ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் தரப்பில் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதத்தில் கூறியதாவது:
ஓ.பி.எஸ் தரப்பு வாதம்:
“எந்த வாய்ப்பும் அளிக்காமல், காரணமும் கூறாமல் என்னை கட்சியில் இருந்து நீக்கியது நியாயமற்றது. அ.தி.மு.க கட்சி விதிகளை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது. அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும்; அந்த விதியை பொதுக்குழு திருத்த முடியாது. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட புதிய நிபந்தனைகளை விதித்து விதிகளைத் திருத்தியுள்ளனர்.
அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமையைக் கலைக்கும் முடிவு தன்னிச்சையாக எடுக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அடிப்படை உறுப்பினர்களாலேயே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். கட்சியில் பெரும்பான்மை உள்ளது என்பதற்காக எடுத்த முடிவு, கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு விரோதமானது.
தி.மு.க வுடன் நெருக்கம் காட்டியதாக எளிதான காரணத்தைக் கூறி என்னை நீக்கியுள்ளனர். என்னை நீக்கிய முறை எம்.ஜி.ஆரின் கொள்கைக்கு விரோதமானது. இ.பி.எஸ்-ஐ பொதுச் செயலாளர் ஆக்குவதற்காகவே என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.
பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவருவதற்கு முன் கட்சியில் இருந்து கருத்து கேட்கப்படவில்லை. நிபந்தனைகளை நீக்கினால், அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடத் தயார் என்று ஓ.பி.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
வைத்திலிங்கம் தரப்பு வாதம்:
“பல்வேறு பொறுப்புகளை வகித்த நிலையில், விளக்கம் கேட்காமல் தன்னை நீக்கியுள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு பொதுச்செயலாளருக்கான அதிகாரம் வழங்கப்பட்டது. எக்காரணம் கொண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக இருக்க முடியாது. பதவிகள் காலாவதியாகி விட்டதாகவும் ஒருவர் கூறமுடியாது.
ஒற்றைத் தலைமை வேண்டும் என பெரும்பான்மையினர் விரும்பினாலும், அதை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்தான் முடிவெடுக்க முடியும்” என்று வைத்திலிங்கம் தரப்பில் வாதிடப்பட்டது.
ஓ.பி.எஸ். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் வாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இ.பி.எஸ் தரப்பில் வாதங்களை முன்வைத்தனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்கள்:
“ஓ.பி.எஸ் தனக்கென தனி கட்சியை நடத்தி வருகிறார். அவர் எங்களை நீக்கியுள்ளார் : நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும். பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தாங்கள் தான் உண்மையான கட்சி என்றால் தேர்தல் ஆணையத்தில், மக்கள் மன்றத்தில் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும். ஓ.பி.எஸ் தனது சொந்த சகோதரரை எந்த நோட்டீசும் கொடுக்காமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். பொதுக்குழு முடிவுகளே இறுதியானது: முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும்.
தி.மு.க.வை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றைத் தலைமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பதவிகள் காலாவதியாகவில்லை.” என்று வாதிடப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”