மத்திய அமைச்சரவையில் அதிமுக? அமீத் ஷா வருகை தள்ளிப்போன பின்னணி

பிஜேபி தேசிய தலைவர் அமீத் ஷா தமிழக வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் அதிமுகவை இணைப்பது குறித்து அவர் பிரதமருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான ஆலோசனை நடைபெற இருப்பதால், டெல்லியில் தங்கியிருக்குமாறு அமீத் ஷாவிடம் பிரதம் மோடி சொல்லியிருக்கிறார். அதனால்தான் தமிழக வருகை தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக பிஜேபி தரப்பில் சொல்லப்படுகிறத்து.

பிஜேபியின் தேசிய தலைவர் அமீத் ஷா மூன்று நாள் சுற்று பயணமாக தமிழகத்துக்கு நாளை வருவதாக இருந்தது. இந்நிலையில் இன்று காலை அவரது பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.

இன்று டெல்லியில் நடைபெறும் பிஜேபி முதல் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமீத் ஷா கலந்து கொள்கிறார். இதையடுத்து பிரதமருடன் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமீத் ஷா கலந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார்.

கோவா முதல்வராக இருக்கும் மனோகர் பரிக்கர் வகித்து வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி காலியாக இருக்கிறது. அதே போல, துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடு வசித்து வந்த நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் பதவியும் காலியாக இருக்கிறது. மூத்த அமைச்சர்கள் சிலர் கூடுதலாக சில துறைகளை வைத்துள்ளார்கள். அவர்களின் பளுவை குறைக்கவும் மோடி முடிவெடுத்துள்ளார். பிஜேபியினர் மட்டுமல்லாது, கூட்டணி கட்சியினருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் சமீபத்தில் பாஜக கூட்டணியில் இணைந்தார். அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மூன்றாக பிரிந்திருந்த அதிமுக, இரண்டாக இணைய இருக்கிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பிஜேபியின் வழிகாட்டுதலுடன் இணைகிறார்கள். இந்த இணைப்புக்கு காரணமாக இருந்த மைத்திரேயன் எம்.பி.க்கு மத்தியில் கேபினெட் அந்தஸ்தில் அமைச்சராக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் அதிமுகவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இது குறித்து கட்சி தலைமையுடன் பேசவே, அமீத் ஷாவை டெல்லியில் இருக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.

மத்திய அமைச்சரவையில் அதிமுக இணையும் பட்சத்தில் மத்திய இணை அமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இணை அமைச்சர்களாக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ஒருவரும், ஈபிஎஸ் அணியில் இருந்தும் ஒருவரும் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

அமைச்சரவை மாற்றத்தின் போது பதவியை தக்க வைக்க பொன்.ராதாகிருஷ்ணன் போராடி வருகிறார். அதே நேரத்தில் பிஜேபி சார்பாக ராஜ்யசபா எம்பியாக இருக்கும் இல.கணேசனும் அமைச்சராக முடியுமா என்று லாபி செய்து வருகிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close