அதிமுக.வுக்கு புதிய டி.வி., புதிய நாளிதழ் : எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இபிஎஸ் தகவல்

அதிமுக.வுக்கு புதிய டி.வி, புதிய நாளிதழ் தொடங்க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. டிடிவி தினகரனை எதிர்கொள்வது பற்றியும் கூறப்பட்டது.

அதிமுக.வுக்கு புதிய டி.வி, புதிய நாளிதழ் தொடங்க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. டிடிவி தினகரனை எதிர்கொள்வது பற்றியும் கூறப்பட்டது.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனவரி 8-ம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் சூழலில், இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றது.

டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றம் நுழையும் சூழலில் அவரை அதிமுக உறுப்பினர்கள் எப்படி எதிர்கொள்வது? என்பதும் முக்கியப் பிரச்னையாக இருந்தது. இந்தச் சூழலில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 111 பேர் உள்ளனர். ஆனால் இந்தக் கூட்டத்தில் 104 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். முக்கியமான காலகட்டத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு 7 எம்.எல்.ஏ.க்கள் ஆப்சென்ட் ஆனது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் மேற்படி 7 எம்.எல்.ஏ.க்களும் தாங்கள் சொந்தக் காரணங்களால் வர இயலவில்லை என தலைமைக்கு தகவல் தெரிவித்ததாக தெரிகிறது.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில், டிடிவி தினகரன் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. ‘கட்சிக்கோ ஆட்சிக்கோ குந்தகம் ஏற்படும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்து கூட்டத்தில் பேசியதாக நிர்வாகிகள் சிலர் கூறினர். இதன் அர்த்தம், டிடிவி தினகரனுடன் நெருக்கம் காட்டி கட்சிக்கு தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம் என்பதுதான்.

டிடிவி தினகரன் பேசும்போது, கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்ளக்கூடாது என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். அதிமுக.வின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான ஜெயா டிவி, அதிகாரபூர்வ பத்திரிகையான நமது எம்.ஜி.ஆர் ஆகியன சசிகலா தரப்பு கையில் இருக்கின்றன. அவற்றை கைப்பற்ற இருப்பதாக இபிஎஸ், ஓபிஎஸ் கைகோர்த்த உடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தனியார் சொத்தான அவற்றை கைப்பற்றுவது சாத்தியமல்ல என தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, புதிதாக அதிமுக.வுக்கு தொலைக்காட்சியும் நாளிதழும் தொடங்க இருப்பதாக இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவித்திருக்கிறார். துணை முதல்வர் ஓபிஎஸ் பேசுகையில், ‘உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள கட்சி நிர்வாகிகள் தயாராக வேண்டும்’ என கூறியிருக்கிறார்.

கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களிடம் பேசுகையில், ‘சட்டமன்றத்தில் எந்த சூழலையும் நாங்கள் சமாளிப்போம்.’ என்றார். அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், ‘சட்டமன்றத்தில் ஜனநாயக மாண்புகளை காப்பாற்றுகின்ற நிலையை கடைபிடிப்போம். அம்மா எப்போதுமே மரபுகளை காப்பாற்றினார். அந்த நிலையில் எல்லோருமே அவரவர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிரச்னைகள், அம்மா அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்வார்கள். டிடிவி தினகரன் வருவதால் ஒரு பாதிப்பும் இருக்காது. நாம் ஒருவர் நமக்கு ஒருவர் கதைதான் அது! டிடிவி தினகரன், ஸ்டாலின் ஆகியோரால் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது’ என்றார் ஜெயகுமார்.

 

×Close
×Close