அதிமுக செய்தி தொடர்பாளர்கள் புதிய பட்டியல் : ஜெ.வால் நியமிக்கப்பட்ட 8 பேர் பதவி இழந்தனர்

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் புதிய பட்டியல் இன்று வெளியானது. ஏற்கனவே ஜெயலலிதாவால் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட 8 பேர் பதவி இழந்தனர்.

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் புதிய பட்டியல் இன்று வெளியானது. ஏற்கனவே ஜெயலலிதாவால் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட 8 பேர் பதவி இழந்தனர்.

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் புதிய பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒரு கூட்டறிக்கை மூலமாக இன்று (ஜனவரி 3) வெளியிட்டனர். முன்னதாக கடந்த நவம்பர் 28-ம் தேதி இவர்கள் இருவரும் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘செய்தி தொடர்பாளர்கள் பட்டியல் மாற்றி அமைக்கப்பட இருக்கிறது. அதுவரை யாரும் கட்சி சார்பில் டி.வி. விவாதங்களில் பங்கேற்க வேண்டாம்’ என கேட்டுக் கொண்டிருந்தனர்.

அன்றைய நிலவரப்படி ஜெயலலிதாவால் கடந்த ஆண்டு ஜூனில் நியமனம் செய்யப்பட்ட 14 பேர் அதிமுக.வின் செய்தி தொடர்பாளர்களாக பொறுப்பில் இருந்தனர். அவர்களின் பட்டியல் வருமாறு :

1. பொன்னையன் (முன்னாள் அமைச்சர்), 2. பண்ருட்டி.ராமச்சந்திரன் (முன்னாள் அமைச்சர்), 3. ஆர்.வைத்திலிங்கம் (கழக அமைப்புச் செயலாளர், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்), 4. பா.வளர்மதி (கழக இலக்கிய அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர்), 5. நாஞ்சில் சம்பத் (தலைமைக் கழகப் பேச்சாளர்), 6. டாக்டர் கோ.சமரசம் ( தலைமைக் கழகப் பேச்சாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), 7. எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் (முன்னாள் மத்திய அமைச்சர்), 8. டாக்டர் வைகைச்செல்வன் (முன்னாள் அமைச்சர்), 9. சி.ஆர். சரஸ்வதி (கழக மகளிர் அணி துணைச் செயலாளர்), 10. பேராசிரியர் தீரன் (தலைமைக் கழகப் பேச்சாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), 11. கௌரிசங்கர் (சிவகங்கை மாவட்டம்), 12. பாண்டியராஜன் (அமைச்சர், ஆவடி சட்டமன்றத் தொகுதி), 13.கோவை செல்வராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), 14. நிர்மலா பெரியசாமி (தலைமைக் கழகப் பேச்சாளர்)

மேற்கண்ட 14 பேரில் நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் டிடிவி தினகரன் அணியில் இருக்கிறார்கள். எந்த அணியிலும் தன்னை அடையாளப்படுத்தாமல் இருந்த எஸ்.ஆர்.பி., சமீப நாட்களாக இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புடன் இணைந்து கொண்டார். எனவே டிடிவி அணியைச் சேர்ந்த இருவரைத் தவிர, ஏனைய 12 பேரும் மீண்டும் செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. கூடுதலாக இபிஎஸ், ஓபிஎஸ் என இரு தரப்பிலும் சிலருக்கு வாய்ப்பு இருக்கும் என பேசப்பட்டது.

ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட யாருடைய பதவியையும் பறிப்பதில்லை (சசிகலா அணியினரை தவிர) என்கிற நிலைப்பாடை இபிஎஸ்-ஓபிஎஸ் கடைபிடித்து வருவதால் அப்படி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பலரும் அதிர்ச்சி அடையும் விதமாக 8 பேரின் பதவிகள் பறிக்கப்பட்டிருக்கின்ன.

இன்று (ஜனவரி 3) நியமனம் செய்யப்பட்ட அதிமுக புதிய செய்தி தொடர்பாளர்கள் பட்டியல் வருமாறு :

1. சி.பொன்னையன் (முன்னாள் அமைச்சர்), 2. பா.வளர்மதி (அதிமுக இலக்கிய அணி செயலாளர், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர்), 3. கோகுல இந்திரா (முன்னாள் அமைச்சர்), 4. வைகை செல்வன் (முன்னாள் அமைச்சர்), 5. ஜே.சி.டி.பிரபாகர் (அதிமுக சிறுபான்மை பிரிவு துணை செயலாளர்), 6. கோ.சமரசம் (முன்னாள் எம்.எல்.ஏ.), 7. மருது அழகுராஜ் ( நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் முன்னாள் ஆசிரியர்), 8. கோவை செல்வராஜ் (முன்னாள் எம்.எல்.ஏ.), 9. பேராசிரியர் தீரன் (முன்னாள் எம்.எல்.ஏ.), 10. கே.சி.பழனிசாமி (முன்னாள் எம்.பி.), 11. ஏ.எஸ்.மகேஸ்வரி (முன்னாள் எம்.எல்.ஏ.), 12. வழக்கறிஞர் பாபு முருகவேல் (முன்னாள் எம்.எல்.ஏ.)

இதன்படி அதிமுக செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்ட 8 பேர் பட்டியல் வருமாறு :

1. பண்ருட்டி.ராமச்சந்திரன் (முன்னாள் அமைச்சர்), 2. ஆர்.வைத்திலிங்கம் (கழக அமைப்புச் செயலாளர், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்), 3. நாஞ்சில் சம்பத் (தலைமைக் கழகப் பேச்சாளர்), 4. எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் (முன்னாள் மத்திய அமைச்சர்), 5. சி.ஆர். சரஸ்வதி (கழக மகளிர் அணி துணைச் செயலாளர்), 6. கௌரிசங்கர் (சிவகங்கை மாவட்டம்), 7. பாண்டியராஜன் (அமைச்சர், ஆவடி சட்டமன்றத் தொகுதி), 8. நிர்மலா பெரியசாமி (தலைமைக் கழகப் பேச்சாளர்)

இவர்களில் நாஞ்சில் சம்பத்தும், சி.ஆர்.சரஸ்வதியும் டிடிவி.தினகரன் அணியில் இருக்கிறார்கள். எனவே அவர்களது பதவியை பறித்ததில் யாருக்கும் அதிர்ச்சி இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன், எஸ்.ஆர்.பி., ஆகியோர் தங்களால் மீடியா விவாதங்களுக்கு செல்ல முடியாத நிலையை கூறிவிட்டதால், அவர்களை சேர்க்கவில்லை என தெரிகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்ற மாஃபாய் பாண்டியராஜனுக்கு, முக்கியத்துவம் இல்லாத தொல்லியல் துறை ஒதுக்கப்பட்டதிலேயே நொந்து போனார் அவர்.

மீடியா தொடர்பை பெரிதும் விரும்பும் மாஃபாய் பாண்டியராஜனிடம் இருந்து செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டதில் அப்செட் ஆகியிருக்கிறார் அவர். ‘ஓபிஎஸ் அணிக்கு தாவிய முதல் அமைச்சர்’ என பெருமையாக உச்சரித்துக்கொண்ட அவரை, இப்போது இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளுமே கண்டு கொள்வதில்லை என்பதுதான் சோகம்!

வைத்திலிங்கம், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும், எம்.பி.யாகவும், தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால் இந்தப் பதவியில் இருந்து விடுபட ஒப்புக்கொண்டாராம். இபிஎஸ் அணியைச் சேர்ந்தவரான கெளரி சங்கரும், ஓபிஎஸ் அணியை சேர்ந்தவரான நிர்மலா பெரியசாமியும் இந்தப் பதவி பறிப்பில் உச்சகட்ட அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்!

புதிதாக பட்டியலில் இடம்பெற்ற கோகுல இந்திரா, மருது அழகுராஜ், ஜே.சி.டி.பிரபாகர், மகேஸ்வரி, கே.சி.பழனிசாமி, பாபு முருகவேல் ஆகிய 6 பேரில் கடைசி நால்வரும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

×Close
×Close