சென்னையில் முதன்முதலாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னையில் முதன்முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எல்லையில் ராணுவ வீரர்களுக்கு அவசர கால சிகிச்சை அளிக்க பயன்பட்டு வந்த ஏர் ஆம்புலன்ஸ், அதாவது ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ், பிற மாநிலங்களில் புழக்கத்தில் உள்ளது. இருப்பினும், தமிழகத்தில் அத்தகைய வசதி இல்லை என நீண்ட காலமாக வருத்தம் நிலவி வந்தது.

தற்போது அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், முழுவதும் மருத்துவத் தேவைக்காக மட்டுமே அவரசகால முதலுதவிகளோடு கூடிய ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை இரண்டு நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகத் தலைநகரான சென்னையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் முதன்முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இச்சேவையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார்.

அவசர கால சிகிச்சை, ஓர் ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு நோயாளிகளை கொண்டு செல்லுதல், ஓரே ஊருக்குள், ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நோயாளிகளை கொண்டு சென்று அவசர சிகிச்சை அளித்தல், உறுப்பு மாற்று சிகிச்சையின் போது உடல் உறுப்புகளை குறித்த நேரத்துக்கு கொண்டு செல்லுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் தேவைகளுக்கு இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

மேலும், இந்த ஆம்புலன்ஸில் அவசர கால மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அணைத்து வசதிகளுடன் கூடிய உபகரணங்களும் இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

×Close
×Close