சட்டவிரோத பேனர்கள் அனைத்தும் அகற்றம்: சென்னை மாநகராட்சி தகவல்

சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டதாக சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் தகவல்.

சென்னையில் அனுமதி இல்லாத மற்றும் சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டதாக சென்னை மாநகராட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக சாலையை மறைத்து பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு கடந்த மாதம் 28 ஆம் தேதி புகார் கடிதம் அளித்தார். அதில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சி கடந்த மாதம் 24 தேதி நடைபெற்றது. அதற்காக சென்னை அவ்வை சண்முகம் சாலை முதல் டிடிகே சாலை வரையும், சென்னை பலகலைக்கழகம் முதல் ரிசர்வ் வங்கி வரையும் அனுமதியின்றி சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றக் கோரி காவல் துறைக்கு அளித்த புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டு இருந்தார். மேலும் ஆதாரங்கள் தொடர்பான பல புகைப்படங்களையும் இணைத்து புகார் கடிதத்தை அளித்திருந்தார்.

இந்த, புகார் கடிதத்தின் அடிப்படையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தானாக முன் வந்து வழக்காக இதனை பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் மார்ச் 1 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் இருந்த அரசு பீளிடரிம் தலைமை நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். சென்னையில் அனுமதியின்றியும், சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனரை அகற்றாமல் காவல் துறையும் மாநகராட்சியும் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்று கேள்வி எழுப்பினார். நீதிபதிகள் குடியிருப்பு உள்ள அடையாரில் இருந்து உயர்நீதிமன்றம் வரை பெரிய அளவில் பேனர்கள் இல்லை. ஆனால் மற்ற பகுதியில் அனுமதியின்றி பேனர் வைப்பது தொடர்கின்றது என தெரிவித்தனர். மேலும் தான் ஒவ்வொரு முறையும் விமான நிலையம் செல்லும் போது இதனை பார்க்கின்றேன். நான் சென்னை விமான நிலையம் செல்லும் போது சாலையின் மையப்பகுதி மற்றும் நடைபாதை முழுவதும் குறுக்காகக பேனர் வைத்திருப்பதை பார்த்துள்ளேன்.

இதனால் பொதுமக்கள், நடந்து செல்பவர்கள், மாணவர்கள் நடைபாதையை பயன்டுத்த முடியாமல் சிரமப்படுவதை கண் கூடாக பார்த்தேன் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். இது போன்ற பேனர்கள் வைக்கப்பட்டதால் சாலைகளில் உள்ள வழிப் பலகைகள் கூட தெரியவில்லை, அனுமதி இல்லாத பெரிய அளவிலான பேனர்கள் வைக்கபட்டு இருந்து என்றும் கூறினார். சென்னை கீரின்வேஸ் சாலை முதல் சென்னை உயர்நீதிமன்றம் வரை உள்ள சாலை மட்டும் பேனர் இல்லாமல் இருப்பதாகவும், அதைப் போன்று அனைத்து சாலைகளும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதிகள் சட்டவிரோதமாக அல்லது அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை உடனடியாக அகற்றி அது தொடர்பான அறிக்கை ஜன.5 தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கும் , காவல் துறைக்கும் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது சென்னை நகரில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களும் அகற்றிவிட்டதாகவும், இது தொடர்பான அறிக்கை நாளை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

×Close
×Close