திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் துவங்கியது... போராட்டம் குறித்த ஆலோசனை

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக இன்று திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி விவகாரத்தில் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மற்றும் மாநில அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தும் முடிவை திமுக எடுத்திருந்தது. இது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தை திமுக இன்று நடத்தி வருகிறது.

திமுக செயல் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திராவிட கழகம் ஆகிய கட்சிகள் பங்கேற்றுள்ளது. திருநாவுக்கரசர், திருமாவளவன், கி.வீரமணி, முத்தரசன் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அழைப்பு விடுத்தும் தேமுதிக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு காட்டி வரும் மெத்தனப்போக்கைக் கண்டித்து தமிழகத்தில் மாபெரும் போராட்டங்கள் நடத்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த அனைத்துக்கட்சி கூட்டம் முடிவடைந்த பின்னர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

×Close
×Close