Advertisment

கோரப்பிடியிலும் பசி தீர்க்கும் தாய் மடி - ஊரடங்கு வரை அம்மா உணவகத்தில் இலவசம் சாத்தியமா?

Amma Unavagam: அம்மா உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், நடமாடும் அம்மா உணவகங்கள் மூலமாகவும் உணவுகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசு காப்பகங்களில் உள்ள ஆதரவற்றவர்களுக்கும் முதியோர்களுக்கும் நடமாடும் அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்குவது தடையின்றி நடந்து வருகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
amma unavagam provide food for people india lock down covid 19

Amma Unavagam: கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து தப்பிக்க, தன் வழக்கமான இயக்கத்தை நிறுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை அடகு வைத்து போராடிக் கொண்டிருக்கிறது இந்திய தேசம். ஆனால், அந்த வாழ்வாதாரத்தின் இன்றியமையாத ஒன்றாக இருக்கும் மக்களின் 'பசி'யை ஆற்றுவதில் பெரும் பங்காற்றி வருகிறது அம்மா உணவகம்.

Advertisment

publive-image

தமிழகத்தில் கடந்த 2013-ல் ஜெயலலிதா ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்மா உணவகம் திட்டம் ஏழைகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. கடந்த 7 வருடங்களாக ஏழைகளின் ஆதரவுடன் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் காலை உணவாக இட்லி 1 ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மதிய உணவாக சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், கருவேப்பிலை சாதம், கீரை சாதம் ஆகியவை தலா 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. இரவு நேரத்தில் பருப்பு கடைசலுடன் 2 சப்பாத்திகள் 3 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. சென்னையில் ஒரு வார்டு 2 என்கிற அடிப்படையில் அரைகிலோ மீட்டர் இடைவெளியில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன.

இந்த சூழலில் தான் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வெளியே வராமல் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். காய்கறி உட்பட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வர அனுமதிக்கப்படுகிறது. அதுவும் நேரக்கட்டுப்பாட்டுடன்.

ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா; மொத்தம் 67 - முதல்வர் பழனிசாமி பிரஸ் மீட்

எனினும், ஆதரவற்றோர், சாலைகளில் வசிப்போர், கடைநிலை தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் பணிபுரிபவர்கள் உணவின்றி அல்லல்படும் சூழல் உருவானது.

இதுகுறித்த ரிப்போர்ட் முதல்வர் பழனிசாமிக்கு செல்ல, அவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களின் நிலை பற்றி ஆலோசிக்கப்பட்டது. கொரோனா பிரச்சனைகளால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கும், வீடற்ற ஏழைகளுக்கும் உணவுகளை தடையின்றி வழங்குவதற்கேற்ப 24 மணிநேரமும் அம்மா உணவகங்களை இயக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

publive-image

இதனைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக அம்மா உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், நடமாடும் அம்மா உணவகங்கள் மூலமாகவும் உணவுகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசு காப்பகங்களில் உள்ள ஆதரவற்றவர்களுக்கும் முதியோர்களுக்கும் நடமாடும் அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்குவது தடையின்றி நடந்து வருகிறது.

சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் இருக்கின்றன. கொரோனா வைரஸ் பிரச்சனைகள் இல்லாத முந்தைய காலத்தில் ஒரு அம்மா உணவகத்தில் தினசரி 800 பேர் சாப்பிடுவார்கள். அந்த வகையில் சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் சாப்பிட்டு வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக ஊரடங்கும் அமலிலிருப்பதால் அம்மா உணவகங்களில் சாப்பிடுவோர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 28ம் தேதி எடுக்கப்பட்ட கணக்கின்படி சென்னையில் மட்டும் ஒரு நாளை 14 லட்சம் பேர் சாப்பிட்டுள்ளனர்.

publive-image

அதேசமயம், உள்ளாட்சித் துறையின் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படுகிறது.

வீட்டில் சமைப்பது போன்று அம்மா உணவகங்களில் சமைக்கப்படும் உணவு வகைகளையே அங்கு பணிபுரிபவர்களும் சாப்பிடுகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பரவும் காலம் என்பதால், அம்மா உணவகங்களில் பணியாற்றும் எல்லோரும் முகக் கவசம், கையுறை அணிதல், ஆரோக்கியமான சமையல் அறையை வைத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்படுகிறது அம்மா உணவகங்கள்.

திருமணம், இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கணுமா? உங்களுக்கு உதவும் எண்கள் இவை

கடந்த 2016 – ல் தமிழகத்தைத் வர்தா புயல் தாக்கிய போது, லட்சக்கணக்கானோருக்கு உணவளித்தது அம்மா உணவகம் மட்டுமே. அதற்கு பிறகு தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பசியால் தவிப்போர் அனைவருக்கும் ஆபத்பாந்தவனாய் பசியாற்றி வருகிறது அம்மா உணவகம்.

எனினும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், கையில் பணம் இல்லாமலும் திண்டாடி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு முடியும் வரை, தங்களுக்கும் இலவசமாக உணவளிக்குமா 'அம்மா உணவகம்' என்பதே அவர்களின் ஏக்கமாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment