பத்திரிகை செய்திகளை திருட்டுத் தனமாக வெளியிட்ட பொறியாளர் கைது!

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரபல தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக அவர் பணியாற்றி வருவது தெரியவந்தது.

நம்முடைய பிரச்சனையே நல்ல அறிவை தவறான விஷயத்திற்கு பயன்படுத்துவது தான். அதற்கு ஒரே காரணம், பணம். உணவை வாங்கும் அளவிற்கு பணம் சம்பாதித்தால் போதும் என்கிற குணம் இருக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், பணத்தையே உணவாக உண்ணும் அளவிற்கு கட்டுக்கடங்காமல் பணம் சம்பாதிக்க நினைக்கும் போது தான் அழிவு வாசல் கதவை தட்டுகிறது. அப்படி நினைத்த ஒருவர் போலீசிடம் சிக்கியுள்ள சம்பவம் இது.

தற்போதெல்லாம் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களின் செய்திகள், புத்தக வடிவிலேயே பிடிஎஃப் ஃபைலாக சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், முறையான அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக அந்த செய்திகள் வேறு தளங்களில் வெளியானதால், வார இதழ்களின் விற்பனை குறைவது தெரிவது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து வார இதழ்களின் நிர்வாகிகள் சிலர், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்பரசு தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

சமூக வலைதளங்களில் வந்த பிடிஎஃப் ஃபைல்கள் யார் மூலம் அனுப்பப்படுகின்றன என்பதை போலீஸார் ஆய்வு செய்ததில், magnet.com என்ற இணையதள முகவரியில் இருந்து செய்திகள் அனுப்பப்படுவது தெரியவந்தது. இந்த மேக்னெட் டாட்காமை தூத்துக்குடியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் நடத்தி வருவது போலீஸாரின் தீவிர விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து நேற்று சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரபல தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக அவர் பணியாற்றி வருவது தெரியவந்தது.

மேலும், நாளிதழ் மற்றும் வார இதழ்களின் இணையதளத்துக்குள் சென்று, முறையான அனுமதியில்லாமல் செய்திகளைத் திருடி, பிடிஎஃப் ஃபைலாக மாற்றி, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக அவர் விசாரணையின் போது ஒப்புக் கொண்டார். இதன் மூலம் லட்ச லட்சமாக அவர் பணமும் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவர் மீது, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், நஷ்டத்தை உண்டாக்குதல் போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

×Close
×Close