நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருக்குவளை நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பதில் பெருமை அடைகின்றோம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் இல்லத்தில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டப் பணிகளைத் தொடங்குவோம்.
பெரும் வாய்ப்பை எனக்கு அளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் என சமூக ஊடகங்களில் பதிவிட்டு நாகையிலிருந்து கட்சி மற்றும் பொறுப்புகளை துவக்குவதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல், நீலகிரிக்கு பொறுப்பு அமைச்சராக கே.என் நேருவும், கோவைக்கு பொறுப்பு அமைச்சராக அமைச்சர் செந்தில் பாலாஜியும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
முன்னதாக, தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருந்ததும், தற்போது டெல்டா மாவட்டத்திற்கு சொந்தக்காரர் ஆன கோவி. செழியன் அமைச்சராகி இருக்கும் நிலையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“