டெங்கு காய்ச்சல் இல்லை என்று அரசு சாதிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

இந்தியா விடுதலை அடைந்து 69 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் உயிரிழப்பது மிகப்பெரிய அவலம் ஆகும்.

உயிரிழப்புகளுக்கு காரணம் டெங்கு காய்ச்சல் தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதை மூடி மறைக்கும் செயல்களில் தான் அரசு தீவிரம் காட்டுகிறது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

காய்ச்சலால் கடந்த சில நாட்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக டெங்கு காய்ச்சல் இல்லை என்று அரசு சாதிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் இருவகையான காய்ச்சல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் சுகாதாரக்கேடு உள்ளிட்ட காரணங்களால் டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மற்றொருபுறம் கேரளத்தில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ள எலிக்காய்ச்சலும் இந்த மாவட்டங்களில் பரவத் தொடங்கியுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் காவேரிப்பட்டி என்ற இடத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் இரு குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளன. ஷாலினி என்ற 8 வயது சிறுமியும், ரித்திகா என்ற 5 வயதுக் குழந்தையும் கடந்த சில நாட்களாக கடுமையாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் எந்த பயனும் இல்லாமல் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சித்தாறு கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற பொறியியல் பட்டதாரியும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி, சுவாமிநாதன் ஆகிய இருவரும் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பயன் கிடைக்காமல் நேற்று முன்நாள் உயிரிழந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்த பூஜா என்ற சிறுமி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்த பகுதிகள் அனைத்திலும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆனால், அது கட்டுப்படுத்தப்படவில்லை.

தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட அத்திமுட்லு, கல்லகரம், அகரம், பன்னிஅள்ளி, வேலங்காடு பகுதிகள் உட்பட மாவட்டம் முழுவதும் டெங்குக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் அரசின் அலட்சியம் தான்.கிட்டத்தட்ட மேற்கு மாவட்டங்கள் அனைத்திலுமே சுகாதாரப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படுவதில்லை.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வினியோகிக்கப்படும் குடிநீர் பச்சை வண்ணத்தில் உள்ளது. கிட்டத்தட்ட வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படும் என்பதால், அந்நீரை அவர்கள் சேமித்து வைப்பது வழக்கம். அவ்வாறு சேமித்து வைக்கப்படும் தண்ணீரில் ஓரிரு நாட்களில் புழுக்கள் உருவாவதும் காய்ச்சல் பரவ காரணம் ஆகும். உயிரிழப்புகளுக்கு காரணம் டெங்கு காய்ச்சல் தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதை மூடி மறைக்கும் செயல்களில் தான் அரசு தீவிரம் காட்டுகிறது.

இந்தியா விடுதலை அடைந்து 69 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் உயிரிழப்பது மிகப்பெரிய அவலம் ஆகும். மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை சூழலை அளிக்க தமிழக ஆட்சியாளர்கள் தவறி விட்டனர் என்பதையே டெங்கு உயிரிழப்புகள் காட்டுகின்றன.

கடந்த சில ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் அதிகம் பேர் உயிரிழந்ததைப் போன்று இந்த ஆண்டும் நடக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதல் நடவடிக்கையாக தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் பரவுவதை தமிழக அரசு வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டும்.

அதேபோல், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை அனைத்து இடங்களிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கவும், மருத்துவ ஆய்வுகளை செய்யவும் தேவையான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து வட்ட அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு சிகிச்சைக்கான வசதிகளை ஏற்படுத்துதல், டெங்கு அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக செய்ய வேண்டியவை குறித்து விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துதல், காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துதல், பப்பாளி இளைச்சாறு, நில வேம்பு கசாயம் ஆகியவற்றை இலவசமாக வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் டெங்குக் காய்ச்சலை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

×Close
×Close