Advertisment

காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட் வினா... இனியாவது நீர் மேலாண்மை அமைச்சகத்தை ஏற்படுத்துக: அன்புமணி

காவிரி நீரை சேமிப்பது உள்ளிட்ட நீர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வினா எழுப்பியுள்ளது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
anbumani

தமிழகத்திற்கு கர்நாடகத்திடமிருந்து கிடைக்க வேண்டிய தண்ணீரை போராடிப் பெறுவதற்கும், அவ்வாறு பெற்ற நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துவதற்கும் வசதியாக தமிழகத்தில் நீர் மேலாண்மை என்ற புதிய அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரி நீரை சேமிப்பது உள்ளிட்ட நீர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன் என்று தமிழக அரசுக்கு வினா எழுப்பியுள்ளது. இப்படி ஒரு சூழலை எதிர்கொள்ள நேரிட்டதற்காக திராவிடக் கட்சி ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

காவிரி நீர் சேமிப்பு குறித்து உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள வினாக்கள் அர்த்தமுள்ளவை. மேட்டூர் அணையில் கூடுதல் நீரை ஏன் சேமித்து வைக்கக்கூடாது? காவிரியின் குறுக்கே கூடுதலாக அணை கட்டாதது ஏன்? என்பன போன்ற உச்ச நீதிமன்றத்தின் வினாக்கள் தமிழகத்தின் பூகோள அமைப்பு குறித்த புரிதல் இல்லாததால் எழுப்பப்பட்டவை.

அதேநேரத்தில் காவிரியில் வரும் நீரை சேமித்து, வறட்சிக் காலங்களில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீர் மேலாண்மை செய்யாதது ஏன்? என்பன உள்ளிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வினாக்கள் சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டியவையாகும்.

தமிழ்நாட்டை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் நீர் மேலாண்மை குறித்த புரிதல் சற்றும் இல்லை என்பதுதான் உண்மை. காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க காவிரி ஆற்றிலும், கொள்ளிடம் உள்ளிட்ட அதன் கிளை ஆறுகளிலும் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை வீதம் கட்ட வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக வலியுறுத்தி வருகிறது. அதையேற்று தடுப்பணைகள் மட்டும் கட்டப்பட்டிருந்தால் காவிரி பாசன மாவட்ட மக்களுக்கு வறட்சி என்ற வார்த்தையே பொருள் புரியாத புதிராக மாறியிருந்திருக்கும்.

ஆனால், தடுப்பணைகளின் தேவையும், மகத்துவமும் அறியாத திராவிடக் கட்சிகளின் ஆட்சியாளர்கள் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. நாகை மாவட்டம், குமாரமங்கலத்திற்கும், கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் இடையில், கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை தேக்கும் வகையில், 400 கோடி ரூபாயில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டப்படும் என்று 04.07.2014 அன்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்பின் 3 ஆண்டுகளாகியும் இதுவரை அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எந்த அடிப்படைப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அதேபோல், கொள்ளிடம் கடலில் கலக்கும் அளக்குடி என்ற இடத்தில் ரூ.117 கோடியில் தடுப்பணை கட்டலாம் என்ற பரிந்துரையை தமிழக ஆட்சியாளர்கள் செயல்படுத்தாததால் அப்பகுதி வழியாக 20 கி.மீ தொலைவுக்கு கடல் நீர் உள்நுழைந்து பாசன ஆதாரங்களையும், குடிநீர் ஆதாரங்களையும் முற்றிலுமாக சிதைத்து விட்டது. இவை அனைத்துக்கும் காரணம் நீர் மேலாண்மை குறித்த புரிதல்தமிழக ஆட்சியாளர்களுக்கு இல்லாததுதான்.

பல நேரங்களில் கர்நாடகத்திடமிருந்து 5 டி.எம்.சி, 10 டி.எம்.சி நீருக்காக தமிழகம் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியிருக்கிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் 900 டி.எம்.சி. தண்ணீரை நாம் வீணாக கடலில் கலக்க விட்டிருக்கிறோம்.

குறைந்த எண்ணிக்கையில் தடுப்பணைகளை கட்டியிருந்தால் கூட ஆண்டுக்கு சராசரியாக 90 டி.எம்.சி தண்ணீரை சேமித்திருக்க முடியும். அதன் மூலம் வறட்சிக்காலங்களில் கூட நீர்நிலைகளில் உள்ள நீரைக் கொண்டும், நிலத்தடி நீரைக் கொண்டும் சாகுபடி செய்திருக்க முடியும். ஆனால், அதை செய்ய ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலுமே தண்ணீர் வந்தால், அது அப்பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு தானாக சென்று நிரப்பும் வகையில் வரத்துக் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றைத் தூர்வாரத் தவறியதன் மூலம் ஆற்றில் வரும் தண்ணீர் ஏரி, குளங்களுக்கு செல்லாமல் நேரடியாக கடலுக்கே செல்லும் நிலையை ஆட்சியாளர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் ஒரு காலத்தில் 42,000 ஏரிகள் இருந்தன. ஆனால், சுமார் 5000 ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்ட நிலையில் இப்போது 37,000 ஏரிகள் மட்டுமே உள்ளன. இதனால் காவிரியில் வரும் நீரை சேமித்து வைத்திருந்து பயன்படுத்த முடியாத நிலையில் தமிழகம் உள்ளதை மறுக்க முடியாது.

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கண்டு காவிரியில் வரும் நீரை முழுமையாக சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நீர் மேலாண்மைக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. தாமிரபரணி, காவிரி பாசனப்பகுதிகளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டபோது இதைத்தான் வலியுறுத்தினேன்.

நீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம் அமைப்பதன் மூலம் நீர் ஆதாரங்கள் வலுப்படுத்தப்படுவதுடன், மணல் கொள்ளையும் தடுக்கப்படும். மணல் கொள்ளையை தடுத்தாலே நிலத்தடி நீர் மட்டம் சரிவதை தடுக்கலாம்.

எனவே, தமிழகத்திற்கு கர்நாடகத்திடமிருந்து கிடைக்க வேண்டிய தண்ணீரை போராடிப் பெறுவதற்கும், அவ்வாறு பெற்ற நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துவதற்கும் வசதியாக தமிழகத்தில் நீர் மேலாண்மை என்ற புதிய அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த அமைச்சகத்திற்கு வழிகாட்டுவதற்காக தலைசிறந்த நீரியல் வல்லுநர் ஒருவரை ஆலோசகராக நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Supreme Court Anbumani Ramadoss Pmk Cauvery Issue
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment