உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் பறிப்பு... வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு: அன்புமணி கண்டனம்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 17 வகையான உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 192 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன.

மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் செலவழித்து உருவாக்கப்பட்ட உயர்சிறப்பு மருத்துவக் கல்வி கட்டமைப்பை மத்திய அரசு அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர்சிறப்பு மருத்துவப் படிப்புக்கான (DM/Mch) மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை மாநில அரசுகள் நடத்தக்கூடாது என்றும், மத்திய அரசின் மருத்துவச் சேவைகள் தலைமை இயக்குனர் அலுவலகம் தான் நடத்தும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. உயர்சிறப்பு மருத்துவக் கல்வியை தமிழக அரசிடமிருந்து பறிக்கும் இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது.

கூடாரத்திற்குள் முதலில் முகத்தை நுழைத்த ஒட்டகம் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றதும் ஒட்டுமொத்த உடலையும் நுழைத்து உள்ளே வந்து படுத்துக் கொண்டதைப் போன்று தான், மருத்துவக் கல்வித் துறையில் நீட் தேர்வு என்ற பெயரில் தலையிட்ட மத்திய அரசு, அடுத்தக்கட்டமாக மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% ஒதுக்கீட்டை ரத்து செய்தது. அதைத்தொடர்ந்து உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான (Super Specialty courses) மாணவர் சேர்க்கை இடங்கள் அனைத்தையும் மத்திய அரசு இப்போது ஒட்டுமொத்தமாக பறித்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 17 வகையான உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 192 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. இவை அனைத்தும் தமிழக மாணவர்களைக் கொண்டே நிரப்பப்பட்டு வந்தன.

ஆனால், வசிப்பிடம் சார்ந்த இடஒதுக்கீடு கூடாது என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவரும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்பில் சேரலாம் என்ற நிலை உருவானது. ஆனாலும், அரசு மருத்துவர்களுக்கு 50% இடங்கள், பணி அனுபவத்திற்கு ஆண்டுக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டு அதனடிப்படையில் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டும் அதேமுறையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும், தேசிய தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களே மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

அதன்படி கலந்தாய்வு நடத்த மாநில அரசுகள் தயாராகி வந்த நிலையில் தான், மாநில அரசுகள் இக்கலந்தாய்வை நடத்த முடியாது என்றும், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசின் மருத்துவச் சேவைகள் தலைமை இயக்குனரகம் நடத்தும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

மத்திய அரசின் இந்த முடிவால், தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும். தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு செயலற்றதாகிவிடும். இதெல்லாம் ஒருபுறமிருக்க, இது மாநில சுயாட்சிக்கு எதிரான, மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடும் செயலாகும்.

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒட்டுமொத்தமாக 1215 இடங்கள் மட்டுமே உள்ளன. இவற்றில் 192 இடங்கள், அதாவது 15% இடங்கள் தமிழகத்தில் தான் உள்ளன. தேசியத் தலைநகரான தில்லி, சண்டிகர், ஆந்திரா, பிகார் உள்ளிட்ட 15 மாநிலங்களில் ஓர் இடம் கூட இல்லை.

பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் 22 இடங்கள் மட்டுமே உள்ளன. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவின் சொந்த மாநிலமான இமாலயப் பிரதேசத்தில் 4 இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக தமிழகத்தில் தான் 192 உயர்சிறப்பு மருத்துவக் கல்வி இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தான் இந்த கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதால். இதன் பலனை தமிழக மாணவர்கள் அனுபவிப்பது தான் இயற்கை நீதியாகும். மாறாக தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் பிற மாநில மாணவர்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்பது,‘‘ நீ அரிசியை கொண்டு வா… நான் உமியைக் கொண்டு வருகிறேன். இருவரும் ஊதி ஊதி சாப்பிடலாம்’’ என்பதற்கு இணையாகும். இது தமிழகத்திற்கு எதிரான பெரிய சதி; சமூக அநீதி என்பதில் ஐயமில்லை.

இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்தால் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பெரும்பான்மையான இடங்கள் பிற மாநில மாணவர்களால் கைப்பற்றப்படலாம் அல்லது ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைப் போன்று தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஓரிடம் கூட கிடைக்காமலும் போகலாம்.

இதனால் ஏற்படும் விளைவுகள் தமிழகத்தை மிகவும் மோசமாக பாதிக்கும். இந்தியாவிலேயே மிகவும் சிறப்பான மூன்றாம் நிலை மருத்துவம் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தான் கிடைக்கிறது. அதற்குக் காரணம் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் உயர்சிறப்பு மருத்துவம் படிக்கும் மருத்துவர்கள் அதே அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்ற முன்வருவது தான்.

ஆனால், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை பிற மாநிலத்தவர் கைப்பற்றினால், அவர்கள் சொந்த மாநிலத்தில் தான் சேவை செய்வார்கள். இதனால் தமிழக அரசு மருத்துவமனைகளில் உயர்சிறப்பு மருத்துவம் வழங்க முடியாத நிலை ஏற்படும். அரும்பாடுபட்டு மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்கி அதனால் தமிழக மாணவர்களுக்கு எந்த பயனும் கிடைக்காது என்பதை ஏற்க முடியாது.

தமிழகத்தில் உள்ள உயர்சிறப்பு மருத்துவக் கல்விக் கட்டமைப்பை, தமிழகத்திடம் குறைந்தபட்ச ஆலோசனை கூட நடத்தாமல் பிறமாநில மாணவர்களுக்கு மத்திய அரசு திறந்து விடுவதும், அதை எதிர்க்கத் துணிவின்றி பினாமி அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை.

தமிழக அரசு நினைத்தால் இந்த நடவடிக்கையிலிருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெற முடியும். குறைந்தபட்சம் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 50 விழுக்காட்டை ஒதுக்கும்படி வலியுறுத்த முடியும்.

வேலூரில் செயல்பட்டு வரும் கிறித்தவ மருத்துவக் கல்லூரி மத்திய அரசிடம் போராடி 65% இடங்களை தனி ஒதுக்கீடாக பெற்றுள்ளது. ஆனால், தமிழக அரசு இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அஞ்சி புழுவைப் போல நெளிந்து கொண்டிருக்கிறது.

சட்ட நடவடிக்கை எடுத்து தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளரிடம் முறையிட்ட போது, தங்களால் வழக்குத் தொடர முடியாது என்றும், மாணவர்கள் வழக்குத் தொடர்ந்தால் அவர்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் பதிலளித்திருக்கிறார். தமிழக அரசு முதுகெலும்பு இல்லாமல் இருப்பதை நிரூபிக்க இதை விட வேறு எந்த சான்றும் தேவையில்லை.

மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் செலவழித்து உருவாக்கப்பட்ட உயர்சிறப்பு மருத்துவக் கல்வி கட்டமைப்பை மத்திய அரசு அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. இந்த அநீதிக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகி நீதி பெறுவதுடன், தமிழக சட்டப்பேரவையில் புதிய சட்டம் நிறைவேற்றி உயர்சிறப்பு மருத்துவக் கல்வி இடங்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close