Advertisment

"பெரியார் பல்கலைக்கழக போலி சான்றிதழ் மோசடி: சி.பி.ஐ. விசாரணை வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
"பெரியார் பல்கலைக்கழக போலி சான்றிதழ் மோசடி: சி.பி.ஐ. விசாரணை வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை உலுக்கிய போலிச்சான்றிதழ் மோசடி குறித்து கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரணை தொடங்கியுள்ள நிலையில், அதை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. பல்கலைக்கழக முறைகேடுகளை வெளிக்கொண்டுவருவதற்கான விசாரணையை தடுக்க அதிகார வர்க்கங்களின் ஆசியுடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவையாகும்.

Advertisment

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் சுவாமிநாதன் பதவி வகித்த காலத்தில் அங்கு கல்வி வளர்ச்சியை விட ஊழல் வளர்ச்சி தான் மேலோங்கி நின்றது. ஆசிரியர் பணியிடங்கள் தொடங்கி அலுவலகப் பணியாளர்கள் பணியிடங்கள் வரை பணம் வாங்கிக் கொண்டு தான் நிரப்பப்பட்டன. தகுதியில்லாதவர்களை தகுதியானவர்களாக காட்டுவதற்காக போலிச் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன. இந்த முறைகேடுகளை பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக எழுந்த புகார்களின் பயனாக போலிச்சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் குறித்து கையூட்டுத் தடுப்புப் பிரிவின் சேலம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தங்களின் மோசடிகள் அம்பலமாகி விடும் என்று அஞ்சும் ஒரு கும்பல், இவ்விசாரணையை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு வழிகளில் முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.

பினாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு போலிச்சான்றிதழ் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களில் பலர் முதலமைச்சரின் பரிந்துரை பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த விசாரணை தொடர்ந்தால் முதலமைச்சருக்கு நெருக்கடி ஏற்படலாம் என்று கூறி விசாரணைக்கு முட்டுக்கட்டை போடும் சதியில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். பல்கலைக் கழக கோப்புகளை பராமரிக்கும் பொறுப்பிலுள்ள கண்காணிப்பாளர் ராஜமாணிக்கம் என்பவர் மூலம் முக்கியமான கோப்புகள் அழிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த சதிகள் தொடர அனுமதிக்கப் பட்டால் பல்கலைக்கழகத்தில் நடந்த அனைத்து ஊழல்களும் குழி தோண்டி புதைக்கப்பட்டு விடும்.

தமிழகத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஊழலும், மோசடியும் நடைபெறுவது வழக்கம் தான் என்றாலும், அங்கெல்லாம் இலைமறை காயாகவே நடைபெறும். ஆனால், பெரியார் பல்கலைக் கழகத்தில் வெளிப்படையாகவே நடந்துள்ளன. பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 141 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பணிக்கும் ரூ.30 லட்சம் முதல் ரூ.55 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. கையூட்டு பெறப்பட்ட பணிக்கு தகுதியான பலர் விண்ணப்பித்திருந்தாலும் கூட, தகுதியற்ற பலர் தான் போலிச்சான்றிதழ் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உதாரணமாக முதல்வரின் தொகுதியான எடப்பாடியில் அமைந்துள்ள உறுப்புக் கல்லூரியின் நிதியாளராக நியமிக்கப்பட்டுள்ள சங்கீதா என்பவர், திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் பி.காம் படித்துக் கொண்டிருந்த காலத்தில், இன்னொரு கல்லூரியில் பணியாற்றியதாக அனுபவச் சான்றிதழ் பெறப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவருக்கு பணி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் பின்னணியில் செயல்பட்டவர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் பெரியசாமி ஆவார். முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனுக்கு நெருக்கமான இவரே போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்து, அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், துணைவேந்தரின் அனைத்து முறைகேடுகளுக்கும் உடந்தையாக இருந்த பாலகுருநாதன் என்ற பேராசிரியரின் சகோதரர் எந்த பணிக்கும் விண்ணப்பிக்காத நிலையில், பென்னாகரம் உறுப்புக் கல்லூரியில் கணினி இயக்குபவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இப்பணிக்கான அடிப்படைக் கல்வித் தகுதி கூட அவருக்கு இல்லாத நிலையில் விதிகளை தளர்த்தி பணி வழங்கப்பட்டிருக்கிறது. போலிச் சான்றிதழ் மோசடிக்கு இதேபோல் நூற்றுக்கும் மேற்பட்ட உதாரணங்களை ஆதாரத்துடன் கூற முடியும்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த போலிச் சான்றிதழ் ஊழல் குறித்து கடந்த 2012-ஆம் ஆண்டும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை. அதேபோன்ற நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது. போலிச் சான்று கொடுத்து பணியில் சேர்ந்ததாக இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களை பணி நீக்க சேண்டும். இம்மோசடியில் முதலமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால் தமிழகக் காவல்துறை விசாரணை நேர்மையாக நடக்க வாய்ப்பு இல்லை. எனவே, போலிச் சான்றிதழ் மோசடி குறித்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.

Anbumani Ramadoss Periyar University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment