ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: அன்புமணி ராமதாஸ்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சென்னையில் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

பாமாக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் சென்னையில் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

போராட்டத்திற்கு முன்பும், போராட்டத்தின் போதும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக தமிழக அரசும் காவல்துறையினரும் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறை கண்டிக்கத்தக்கதாகும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2016 முதல் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கின்றன. அதன்படி அவர்களின் அடிப்படை ஊதியம், தர ஊதியம் இணைக்கப்பட்டு அதில் 274% புதிய அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத்தொகையும் ஒரே தவணையில் வழங்கப்பட்டு விட்டது. ஆனால், தமிழகத்தில் ஏழாவது ஊதியக்குழுப் பரிந்துரைகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே செல்கிறதே தவிர, அரசு ஊழியர்கள்&ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு இன்னும் வழங்கப்படவில்லை.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்படாத நிலையில், இடைக்கால நிவாரணம் வழங்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அதையும் செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. புதிய பொருளாதராக் கொள்கைகளின் ஒரு கட்டமாக மத்திய அரசு பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு முன்பாகவே தமிழகத்தில் அத்திட்டத்தை செயல்படுத்தி ஓய்வூதியதாரர்களின் சமூகப் பாதுகாப்பை பறித்தவர் ஜெயலலிதா. 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வென்றால் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டமே செயல்படுத்தப்படும் என்று அதிமுக வாக்களித்திருந்தார்.

ஆனால், முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் பழைய ஓய்வுதியத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக குழு அமைக்கப்பட்ட போதிலும் அதன் உறுப்பினர்களை நீக்கியும், சேர்த்தும் ஆடுபுலி ஆட்டம் விளையாடுவதால் பழைய ஓய்வூதியத் திட்டம் உடனடியாக செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தோன்றவில்லை.

புதிய ஓய்வூதியத்திட்டத்தின்படி அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதியில் 60% ரொக்கமாக வழங்கப்படும். மீதமுள்ள 40% பங்குசந்தையில் முதலீடு செய்யப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் தொகை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி வசூலிக்கப்பட்ட பணம் எங்கு போனது என்பது கூட அரசு ஊழியர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் புதிய ஓய்வூதியத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிந்தைய 13 ஆண்டுகளில் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களில் பலர் ஓய்வூதியம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் ஓய்வூதியம் பெறாமல் உயிரிழந்த கொடுமையும் நிகழ்ந்திருக்கிறது.

மேற்குவங்கம், திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேவழியில் தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் எதுவும் இல்லை. ஆனால், அரசு ஊழியர்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே புதிது, புதிதாக பல குழுக்களை தமிழக அரசு அமைத்திருக்கிறது. இதையெல்லாம் உணர்ந்து கொண்டு தான் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் போராடுகின்றனர்.

ஆனால், அவர்களின் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதும், அதில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்தவர்களை திருச்சி- சென்னை சாலையிலும், பெங்களூர் – சென்னை சாலையிலும் தடுத்து நிறுத்தியதும், கைது செய்திருப்பதும் கண்டிக்கத்தக்கதாகும். இத்தகைய அடக்குமுறையை கைவிட்டு அரசு ஊழியர் – ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close