Advertisment

‘மெர்சல்’ விவகாரம் : முதல்வர் சந்திப்பையடுத்து இன்று அவசரமாக கூடுகிறது விலங்குகள் நல வாரியம்

விலங்குகள் நல வாரியத்தின் அவசரக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. அதுவும் ‘மெர்சல்’ படத்தின் தடையில்லா சான்று தொடர்பான கூட்டம் என அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
mersal, vijay, kajal aggarwal

‘மெர்சல்’ தீபாவளிக்கு ரிலீஸாகுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. எத்தனையோ சிக்கல்களைத் தாண்டிவந்த படக்குழுவினருக்கு, கடைசியாக செக் வைத்திருக்கிறது விலங்குகள் நல வாரியம். படத்தில் பயன்படுத்தப்பட்ட புறா கிராஃபிக்ஸ் செய்யப்பட்டதுதான் என்பதற்கான ஆதாரத்தைப் படக்குழுவினர் சமர்ப்பிக்கத் தவறியதுதான் சிக்கலுக்கு காரணம். மேலும், ராஜநாகத்தைப் பயன்படுத்திவிட்டு, அதன் பெயரை நாகப்பாம்பு என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisment

‘மெர்சல்’ படத்துக்கான விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா அனுமதிச்சான்று கிடைக்கத் தவறியது இதனால்தான். மேலும், சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கொடுத்திருப்பதாக படத்தின் இயக்குநர் அட்லீ அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, ‘எங்கள் சான்றிதழ் இல்லாமல் எப்படி சென்சார் கொடுக்கலாம்’ என சென்சார் போர்டையும் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது விலங்குகள் நல வாரியம். ஆனால், ‘சென்சார் சான்றிதழை இன்னும் கொடுக்கவில்லை. வாய்மொழியாக மட்டுமே சொல்லியிருக்கிறோம்’ என்று ஜகா வாங்கியது சென்சார் போர்டு.

வழக்கமாக, ஒவ்வொரு புதன்கிழமையும்தான் சினிமா தொடர்பான பணிகளுக்கு ஒதுக்கியுள்ளது விலங்குகள் நல வாரியம். கடந்த புதன்கிழமை தான் மேற்கண்ட பிரச்னை ஏற்பட்டதால், இனிமேல் வருகிற புதன்கிழமைதான் அடுத்தகட்ட பிரச்னைகளைத் தீர்க்க முடியும். ஆனால், அன்றைய தினம்தான் தீபாவளி என்பதால், அதற்குள் பிரச்னையைத் தீர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், தீபாவளிக்கு அரசு விடுமுறை என்பதால், அடுத்த வாரம்தான், அதாவது 25ஆம் தேதி தான் விலங்குகள் நல வாரியத்தில் தடையில்லா சான்று பெற முடியும் என்ற சூழ்நிலையும் ஏற்பட்டது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, க்ரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் இல்லத்தில் சந்தித்தார் விஜய். தமிழக அரசு கேளிக்கை வரியை 8 சதவீதமாக குறைத்ததற்காக நன்றி தெரிவிக்கவே இந்தச் சந்திப்பு நடந்தது என்று கூறப்பட்டது. ஆனால், எத்தனையோ மரியாதை நிமித்தமான சந்திப்புகளைக் கண்ட தமிழகம், இதையும் சின்னப் புன்னகையுடன் எதிர் கொண்டது.

மரியாதை நிமித்தமான சந்திப்பின் பலனாக, விலங்குகள் நல வாரியத்தின் அவசரக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. அதுவும் ‘மெர்சல்’ படத்தின் தடையில்லா சான்று தொடர்பான கூட்டம் என அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள விலங்குகள் நல வாரியத்தின் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. விலங்குகள் நல வாரிய அதிகாரிகளான மதியழகன், வினோத் குமார், பரத் குமார், ஷ்ரவன் கிருஷ்ணன், தினேஷ் பாபா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

Tamil Cinema Actor Vijay Mersal Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment