சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர், செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பருடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் மாணவரை தாக்கி, மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
இது குறித்து மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தி.மு.க அரசு தடுக்க தவறி விட்டது என்று கூறியும் அ.தி.மு.க இன்று (டிச.26) ஆர்ப்பாட்டம் அறிவித்தது.
இதுகுறித்து, தென்சென்னை (தெற்கு மேற்கு) அ.தி.மு.க. வக்கீல் அணி மாவட்டச் செயலாளர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தொடர்ந்து தடுக்க தவறி வருகிறது. இதனை கண்டித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கு இணங்க தென் சென்னை (தெற்கு மேற்கு) அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விருகை என்.ரவி தலைமையில் அண்ணா பல்கலைக்கழக வாயில் முன்பு 26-ந் தேதி (இன்று) காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து இன்று பல்கலை வளாகம் முன்பு கூடிய அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள சர்தார் படேல் சாலையில், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் சாலையில் அமர்ந்து அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சாலை மறியல் போராட்டத்தால் கிண்டி வழியாக அடையாறு செல்லும் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்பட அதிமுகவினர் 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பின.
கைது செய்யப்பட்ட அதிமுகவினர் சைதாப்பேட்டை சமூக நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "பாலியல் சீண்டலை தொழிலாக வைத்திருக்கும் ஒருவன் ஆளும் கட்சியின் ஆசீர்வாதம் காரணமாக சுதந்திரமாக நடமாடி இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் சம்பந்தப்பட்டவர் யார்யார் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். எத்தனை மாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதை எல்லாம் காவல்துறை உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“