கோவையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜி.எஸ்.டி குறித்துப் பேசினார். அப்போது எ.கா பேக்கரியில் சாப்பிடும் பன்னுக்கு ஜி.எஸ்.டி இல்லை. ஆனால் அதில் வைத்து வழங்கப்படும் க்ரீமுக்கு 18% ஜி.எஸ்.டி உள்ளது. இதனால் பெரும் சிரமம் ஏற்படுது. அனைத்திற்கும் ஒரே மாதிரியாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து இந்த வீடியோ வைரலான நிலையில், சீனிவாசன், நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். இந்த வீடியோவும் வைரலான நிலையில், கேள்வி கேட்டால் மன்னிப்பு கேட்கச் சொல்வதா? என அரசியல் தலைவர்கள் நிர்மலா சீதாராமன், பா.ஜ.கவை குறிவைத்து கண்டனம் தெரிவித்தனர்.
ராகுல் காந்தி, கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்டவர்களும் அ.தி.மு.க ஜெயக்குமார், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அன்னபூர்ணாவின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில், க்ரீம்- பன் விளம்பர வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதுவும் பேசு பொருளாகி உள்ளது. முதலில் அன்னபூர்ணா பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில், Cream+Bun = Cream - Bun என்று பதிவிட்டு #Stand with Annapoorna, #Nirmalasitharaman, #GST, # FinanceMinister எனப் பதிவிடப்பட்டது. அதாவது இவ்விரண்டும் ஒன்று தான் தனி தனி ஜி.எஸ்.டி தேவையில்லை என்று பொருள் கொள்வது போல் வீடியோ உள்ளது.
இதைப் பதிவிட்ட சில நேரத்தில் இந்த பதிவை எடிட் செய்து, #Annapoorna , #AnnapoornaCoimbatore என மாற்றிப் பதிவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“