ஜெயலலிதாவைப் போல, எடப்பாடி பழனிச்சாமியும் அடிமைக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கக்கூடாது: ராமதாஸ்

எப்போதாவது செயல்படுத்தப்பட வேண்டிய விதியை எப்போதும் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அவரது வழியில் அடிமைக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்றத்தில் அவை விதி எண் 110-ன் கீழ் நேற்று ஒரே நாளில் 5 துறைகளுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கிறார். சட்டமன்றத்தின் ஜனநாயகத்தையும், அவை மரபுகளையும் குழி தோண்டி புதைக்கும் வகையிலான முதல்வரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதமே நடைபெற்றிருக்க வேண்டிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மூன்று மாதங்கள் தாமதமாக இப்போது தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழக அரசில் மொத்தம் 54 துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து பேரவையில் விவாதித்து ஒப்புதல் பெறுவதற்காகவே மானியக் கோரிக்கைகள் மீது சட்டப்பேரவையில் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில் துறை சார்பில் செயல்படுத்தப் படவுள்ள திட்டங்கள் குறித்து அதன் அமைச்சர்கள் அறிவிப்பு வெளியிடுவது வழக்கம்; அது தான் முறை.  

அதன்படியே பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, உயர்கல்வித்துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்பட்டு, அதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களான செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சி.சீனிவாசன், காமராஜ், செல்லூர் ராஜு ஆகியோர் பதிலளித்தனர்.  அதுமட்டுமின்றி, அந்த துறைகள் சார்ந்த அறிவிப்புகளையும் கடந்த வாரமே அவர்கள் வெளியிட்டனர்.

இத்தகைய சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது பங்குக்கு 5 துறைகள் சம்பந்தப்பட்ட  21 அறிவிப்புகளை நேற்று வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்களே கடந்த வாரம் வெளியிட்டிருக்கலாம். ஆனால், அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்காமல் முதல்வரே அனைத்து துறைகளில் அறிவிப்புகளையும் வெளியிடுவது அவை மரபுகளுக்கு பெருமை சேர்க்காது. 

தமிழக சட்டமன்ற விதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 208(1) பிரிவின்படி இயற்றப்பட்டவை ஆகும். பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி அவசரமாக அறிவிப்பு வெளியிட வேண்டுமானால், அதை அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கலாம் என்றும், இந்த அறிவிப்பின் கீழ் எந்த விதமான விவாதமும் கூடாது என்றும் பேரவை விதிகளில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அரிதிலும் அரிதாகவே விதி எண் 110 பயன்படுத்தப்பட வேண்டும் என்பது மரபாகும். எப்போதாவது செயல்படுத்தப்பட வேண்டிய விதியை எப்போதும் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது  அனைத்து அறிவிப்புகளும் தம்மால் தான் வெளியிடப்பட வேண்டும் என்ற ஆணவத்துடன், அனைத்து அறிவிப்புகளையும் 110 விதியின் கீழ் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். 

இப்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களையும் அடிமையாக நடத்திய ஜெயலலிதா, அவர்கள் வெளியிட வேண்டிய அனைத்து அறிவிப்புகளையும் அவரே வெளியிட்டு வந்தார். கடந்த 5 ஆண்டு ஆட்சியில் மட்டும் 110 விதியின் கீழ் 181 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தம்மை வேட்டி கட்டிய ஜெயலலிதாவை நினைத்துக் கொண்டு, அதே அடிமைக் கலாச்சாரத்தை தொடர்ந்து வருகிறார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும், அமைச்சர்களையும்  கோடிகளையும், தங்கக் கட்டிகளையும் கொட்டிக்கொடுத்து வாங்கியதாலோ என்னவோ, அவர்களை தமது அடிமைகளாகவே எடப்பாடி பழனிச்சாமி கருதுகிறார்.

அரசியலில் எடப்பாடியை விட பழுத்த அனுபவமும், அறிவும் கொண்ட அமைச்சர்கள் கூட இந்த அதிகார அத்துமீறலை எதிர்க்கத் துணிவின்றி கோழைகளாக இருப்பது அவர்களுக்கு வேண்டுமானால் லாபம் தரலாம்; தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பயன் தராது.

ஜனநாயகத்தின் பெருமையே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பது தான். அதற்கு மாறாக,  மாநில  முதலமைச்சர் என்ற முறையில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையெல்லாம் மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டு அடிமையாக இருக்கும் ஒருவர், அமைச்சர்களின் அதிகாரங்களைப் பறித்து அவர்களை தமது அடிமைகளாக கருதுவது கேலிக் கூத்தின் உச்சமாகும்.

ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அவரது வழியில் அடிமைக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கக்கூடாது. சட்டமன்றத்தில் அறிவார்ந்த விவாதங்கள் நடப்பதையும், அமைச்சர்களின் துறை சார்ந்த அறிவிப்புகளை அவர்களே வெளியிடுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close