தொடர்ந்து வாயை பிளக்கும் ரோடுகள்... சென்னையில் இன்று....!

அடிக்கடி இதுபோன்று சாலைகளில் பள்ளம் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மெட்ரோ ரயில் பணிக்காக சென்னை மாநகரின் முக்கிய சாலைகளில், சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 9-ஆம் தேதி அண்ணா மேம்பாலம் சாலையில் திடீர் பள்ளம் ஓன்று ஏற்பட்டது. அதில், அரசுப் பேருந்து ஒன்றும், கார் ஒன்றும் சிக்கிக் கொண்டன. அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் இழப்பும் ஏற்படவில்லை. இந்த திடீர் பள்ளம் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், இதுபற்றி யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறினர்.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அருகே, டெய்லர்ஸ் சாலையில் மெட்ரோ ரயில் பணியின் காரணமாக இன்று 6 அடி ஆழத்தில் பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில், எந்த வாகனமும் விபத்தில் சிக்கவில்லை. ஆனால், அடிக்கடி இதுபோன்று சாலைகளில் பள்ளம் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து, பள்ளத்தைச் சரிசெய்யும் பணியில் மாநகராட்சி மற்றும் மெட்ரோ பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

×Close
×Close